அமேசான் ஊழியர் ஒருவர், பரவலான பணி நீக்கத்திற்கு மத்தியில் நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் நிலவும் சூழல் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தனியார் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இ-காமர்ஸ் நிறுவனமானது பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளது. இந்த மாதம் சுமார் 1,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சிலர் ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அமேசான் இந்தியா ஊழியரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் கிரேப்வைன் செயலியில் ஒரு இடுகையின் படி, பணிநீக்கங்கள் பற்றிய செய்திகளைப் பெற்ற பிறகு ஊழியர்கள் "அலுவலகத்தில் அழுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. "Amazon India Current Condition" என்ற தலைப்பில் நேற்றைய தினம் ஊழியர் ஒருவர் 'Batman1' என்ற புனைப்பெயரில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில், தனது குழுவில் 75 சதவீதம் பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு பணி செய்யும் மனநிலை இல்லை என்றும், பணி செய்வதற்கான எந்த உந்துதலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். அவர் எந்த பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பதை குறிப்பிடவில்லை.
மேலும், பணியின்போது திடீரென பணிநீக்கம் செய்யப்படுவதாகவும், இதனால் பலரும் அலுவலகத்தில் மனமுடைந்து அழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பதிவின் ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் வைரலாகி, 4.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாலர்களை பெற்றுள்ளது. இந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தனியார் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் பணிநீக்கங்கள் இந்தியாவில் உள்ள பல துறைகளை பாதித்துள்ளன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு குறிப்பிட்ட தேதியில் தலைமைக் குழுவைச் சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஐந்து மாத பணிநீக்க ஊதியத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் முதல் பேஸ்புக் வரை பல பெரிய நிறுவனங்கள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்தனர். அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது இந்தியர்கள் தான். தலைமை முதல் கடை நிலை ஊழியர்கள் வரை பாரபட்சமின்றி பணிநீக்கம் நடைபெற்றது. அதே போல அமேசான் நிறுவனத்திலும் மிகப்பெரிய பணிநீக்கம் ஒன்று நடக்க இருப்பதாக நவம்பர் மாதம் முதலே தகவல்கள் கசிந்து வந்தன. அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ்-உம் மிகப்பெரிய பண வீக்கம் வர இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது அதிகாரப் பூர்வமாக எதிர்பார்த்ததை விட அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Amazon.com மேலும் 18,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. முன்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் பணியாளர்களைக் குறைப்பதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸ்ஸியால் வெளியிட்ட பொது ஊழியர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது