இந்திய அரசு சார்பாக எலான் மஸ்க் நடத்தி வரும் டெஸ்லா நிறுவனத்திடம் கார் உற்பத்திக்கான திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரிகள் குறைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.


இந்தியா ஆசியாவின் மூன்றாவது பெரிய சந்தையாக இருப்பதாகவும், அதனால் இந்தியாவுக்குள் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரி குறைக்கப்பட வேண்டும் என டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார். தமிழ்நாட்டின் யூட்யூபர் மதன் கௌரி பதிவிட்ட ட்வீட் ஒன்றின் பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் இவ்வாறு கூற, அது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் விவாதங்கள் மேற்கொண்டனர். 







எலான் மஸ்க் இந்தியா மீது முன்வைத்த விமர்சனத்தை ஹ்யுண்டாய் நிறுவனத்தின் உயரதிகாரிகளும் ஆமோதித்து கருத்து தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்கி இருக்கும் ஓலா நிறுவனத்தின் உரிமையாளர் பாவிஷ் அகர்வால் எலான் மஸ்க் சொன்னதை மறுத்து, இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, எலக்ட்ரிக் வாகனங்களைச் செய்தால் அதிக வரியில் இருந்து தப்பிக்க முடியும் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார். 


ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரியப் பொருளாதாரச் சக்தியாக இந்தியா கருதப்படும் போது, எலான் மஸ்க் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியைக் குறைக்க கோரியதால், கடந்த வாரம்  பெருநிறுவனங்கள் துறை மற்றும் நிதித்துறை அமைச்சகங்கள் டெஸ்லா நிறுவனத்திடம் இதுகுறித்த தகவல்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.


மேலும், இந்திய அரசு சார்பாக, டெஸ்லா நிறுவனத்திடம் கார்களை முழுமையாக உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்கும், தனித்தனி பாகங்களாக இறக்குமதி செய்வதற்கும் இடையிலான வரி விகித மாற்றங்களைச் சுட்டிக் காட்டி அதன்மீதும் கருத்துகள் கேட்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



டெஸ்லா நிறுவனத்தின் தரப்பில் இருந்து, தற்போது வரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. நிதித்துறை, பெருநிறுவனங்கள் துறை ஆகியவை தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.


கடந்த ஜூலை மாதம், டெஸ்லா நிறுவனம் சார்பில், இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் மீதான 60 முதல் 100 சதவிகித வரிவிதிப்பு குறைக்கப்பட்டு, 40 சதவிகிதமாக மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையில், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான கார்கள் மீதும் விதிக்கப்படும் 10 சதவிகித சமூக நல வரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வரி கல்வி, சுகாதாரம் முதலான பொதுத்துறை நலன்களுக்குச் செலவிடப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI