திருவாரூரில் 15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா. பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மறைந்த நம்மாழ்வார் கடந்த 2007ஆம் ஆண்டு இந்த பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார். அதனை முன்னெடுத்து நடத்தி வந்தவர் மறைந்த நெல் ஜெயராமன் ஆவார். தமிழர்கள் பாரம்பரியமாக சாகுபடி செய்து வந்த மறைந்துபோன நெல் ரகங்களை மீட்பதை இந்த நெல் திருவிழா நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நெல் திருவிழா தொடங்கியபோது சுமார் பத்துக்கும் மேற்பட்ட மறைந்து போன நெல் ரகங்களை கொண்டு தொடங்கப்பட்டது.
தற்போது மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, காட்டுயானம், யானைக்கவுனி, சீரக சம்பா, கருடன் சம்பா, தூயமல்லி, குள்ளக்கார் உள்ளிட்ட 174 நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு விவசாயிகளுக்குள்ளாகவே பரிமாற்றம் செய்து வழக்கில் இருந்து மறைந்த பாரம்பரிய நெல் ரகங்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கிரியேட் நமது நெல்லை காப்போம் அமைப்பு சார்பில் திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நெல் திருவிழாவில் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட விவசாயிகளும் இந்த நெல் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
பாரம்பரிய நெல் திருவிழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இத்திருவிழாவில் மூத்த வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர். நெல் திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த நெல் திருவிழாவில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கங்கள் நடைபெற்றன.
மேலும் பாரம்பரிய இயற்கை முறை காய்கறி விதைகள், வேளாண் சார்ந்த உபகரண பொருட்கள், இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட அரிசி ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, யானைக்கவுனி, சீரக சம்பா போன்றவைகள் அரங்கங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தக் கண்காட்சியை ஏராளமான விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
நெல் திருவிழாவின் முக்கிய நோக்கமான இயற்கை பாரம்பரிய நெல் ரகங்கள், பங்கேற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 2 கிலோ இலவசமாக வழங்கப்பட்டது. அவற்றை சாகுபடி செய்து அடுத்த ஆண்டு நான்கு கிலோவாக விவசாயிகள் திருப்பி அளிக்க உள்ளனர். இதன் மூலமாக பாரம்பரிய இயற்கை நெல் ரகங்கள் சுழற்சி முறையில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.