Car Safety Floods: வெள்ள காலத்தில் காரை பாதுகாப்பது எப்படி இன்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


மழைக்காலத்தில் கார் பாதுகாப்பு:


மழைக்காலம் காட்சிக்கு இனிமையானதாகவும், விவசாயிகளுக்கு லாபம் அளிப்பதாகவும் இருந்தாலும், சில கார் உரிமையாளர்களுக்கு அது தொல்லையாக அமைந்து விடுகிறது.பல்வேறு உட்கட்டமைப்பு குறைபாடுகள் காரணமாக, கனமழை எதிர்பாராத நேரங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த சூழலில் கார் பார்க்கிங்கிற்கு என பாதுகாப்பான இடவசதி கொண்டிருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இடவசதி இன்றி திறந்த வெளி மற்றும் தாழ்வான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு வெள்ள காலம் என்பது பெரும் பிரச்னையாக அமைகிறது. அவர்களுக்கு உதவும் வகையில் வெள்ள காலத்தில் காரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.




  • பேட்டரிகளை துண்டிக்கவும்: 




கார் நிறுத்தும் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டால், உங்கள் காரை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற முடியாவிட்டாலும், அதன் உயிரைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம். குறிப்பாக காரின் பேட்டரியை துண்டிப்பதன் மூலம் அதில் சேமிக்கப்பட்டுள்ள மின்சாரத்தைப் பாதுகாக்கலாம். மேலும்,  ஷார்ட் சர்க்யூட் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கலாம்.




  • உயரமான பகுதியில் பார்க் செய்யவும்:




வெள்ளம் அடிக்கடி ஏற்படும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், காரை ஒரு உயரமான இடத்தில் பார்க் செய்வது அவசியம். அதற்கான இடம் உங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் இருந்தாலும், அதைப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனமானது. குறிப்பாக ஹேட்ச்பேக்குகள் மற்றும் செடான்களின் உரிமையாளர்கள் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். காரணம் அவை SUV கார்களை விட குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




  • வெள்ளம் நிறைந்த பகுதிகளை தவிர்க்கவும்:




நீங்கள் செல்லும் பாதை அல்லது அதன் ஒரு பகுதியில் ​​நீர் தேங்கினாலோ அல்லது வெள்ளத்தில் மூழ்கினாலோ, அவ்வழியாக  வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதே சிறந்த முடிவாக இருக்கும். தண்ணீர் குறைவாக இருக்கும் என்பத உறுதியாக தெரிந்த பாதைகளில் மட்டும் வாகனத்தை செலுத்துங்கள். அல்லது எதேனும் ஒரு வாகனம் பாதுகாப்பாக அந்த தண்ணீர் சூழ்ந்த பாதையை கடந்து செல்லும் வரை காத்திருங்கள். காரணம்  நீர் தேங்கி நிற்கும் பகுதி பெரிய பள்ளங்கள் அல்லது திறந்த குட்டைகள் போன்ற ஆபத்துகளை மறைத்து இருக்கலாம். இது உங்கள் காரின் சக்கரத்தை எளிதில் சிக்க வைக்கும். 




  • டயரை விட நீர்மட்டம் அதிகமாக இருந்தால் வாகனத்தை நிறுத்துங்கள்:




டயரின் பாதியை விட நீர்மட்டம் உயரமாக இருப்பதைக் கண்டால், காரை அவ்வழியாக செலுத்துவதை நிறுத்துங்கள். காரணம் காரின் எக்சாஸ்ட் அமைப்பானது டயரின் பாதி உயரத்திற்கு இணையாக தான் அமைக்கப்படுகிறது. இதனால், அந்த சூழலில் காரை செலுத்தினால் எக்சாஸ்டில் தண்ணீர் பாயும் வாய்ப்பு உள்ளது. இது காரை பழுதுபார்க்க முடியாத அளவுக்கு கூட சேதத்தை ஏற்படுத்தலாம்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சாலையின் உயரமான பகுதி வழியாக வாகனம் ஓட்டடுவது சிறந்த முடிவாக இருக்கும்.




  • காரை மெதுவாக ஓட்டவும்:




நீர் தேங்கி நிற்கும் பகுதியின் வழியாக தான் கட்டாயம் செல்ல வேண்டி இருந்தால்,  அதற்கேற்ப வாகனம் ஓட்ட வேண்டுவது அவசியம். குறைந்த கியரில் அதிக ஆர்பிஎம்களில், நிலையான வேகத்தை பராமரிப்பது எளிதானது மற்றும் கார் தண்ணீரில் நிற்க வாய்ப்பில்லை. வேகமாக வாகனம் ஓட்டுவது காரின் எஞ்சின் பே அல்லது மின் சாதனங்களில் நீர் கசியும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.  இது மீண்டும் ஆபத்தானது.  ஆட்டோமேடிக் அல்லது டார்க் கன்வெர்ட்டர் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கார் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான விஷயம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கியரில் உங்கள் கார் இருப்பதை உறுதிசெய்ய, மேனுவல் பயன்முறைக்கு மாற்றவும். 




  • கார் நின்றால் ஸ்டார்ட் செய்யாதீர்கள்:




மிக மோசமான சூழ்நிலையில் உங்கள் கார் வெள்ளம் சூழ்ந்த சாலையின் நடுவில் நின்று, டயரின் பாதி உயரத்திற்கு மேல் நீர்மட்டம் இருந்தால், அதை உடனே ஸ்டார்ட் வேண்டாம்.  காரின் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பாகங்களில் தண்ணீர் ஏற்கனவே ஊர்ந்து சென்றிருக்கும் அல்லது வாகனம் செயல்படுவதற்கு இக்னீசியன் அமைப்பிற்கு தேவயான காற்றை உறிஞ்ச வேண்டி இருக்கும். பம்பர் வரை நீரில் மூழ்கியிருந்தாலும், அதை ஸ்டார்ட் செய்வதைத் தவிர்க்கவும். என்ஜின் அல்லது ஏர் ஃபில்டரில் தண்ணீர் நுழைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI