ஹோண்டா நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் ஆக்டிவா ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஹோண்டா ஆக்டிவா:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கூட்டர் பிரிவில்,  ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து கோலோச்சி வருகிறது. ஒவ்வொரு மாத விற்பனையிலும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தற்போது வரை ஆக்டிவா மாடலில் 6 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில் தான், புதிய லிமிடெட் எடிஷன் ஆக்டிவா ஸ்கூட்டரை, ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 


ஆக்டிவா லிமிடெட் எடிஷன்:


அதன்படி, புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆக்டிவா டிஎல்எக்ஸ் மற்றும் ஆக்டிவா ஸ்மார்ட் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. அவற்றின் விலை முறையே  80 ஆயிரத்து 734 ரூபாய் மற்றும் 82 ஆயிரத்து 734 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹோண்டா நிறுவனத்தின் ரெட் விங் டீலர்ஷிப் கடைகளுக்கு நேரடியாக சென்று, பயனாளர்கள் முன்பதிவு செய்யலாம். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.


புதிய மாற்றம் என்ன?


புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில், டார்க் கலர் தீம்ஸ் மற்றும் டார்க் கலர் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. பாடி பேனலில் ஸ்ட்ரைப் கிராஃபிக்ஸ் பணிகளும் இடம்பெற்றுள்ளன. ஆக்டிவா 3டி எம்பலமும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் பேர்ல் சைரன் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. 5 ஸ்போக் அலாய் வீல்களுடன், ஸ்மார்ட் கீ தொழில்நுட்பமும் இதில் வழங்கப்பட்டுள்ளது.


இன்ஜின் விவரங்கள்:


ஆக்டிவா லிமிடெட் எடிஷன் OBD2-இணக்கமான 109.51cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 7.73 bhp பவரையும் 8.9 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா 10 ஆண்டு வாரண்டி தொகுப்பை வழங்குகிறது. அதில் 3 ஆண்டுகள் நிலையானது,  7 ஆண்டு பயனாளர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.


ஹோண்டா நிறுவனம் பெருமிதம்:


புதிய ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிஷன் அறிமுகம் குறித்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சுட்சுமு ஒடானி பெருமிதம் தெரிவித்துள்ளார். அதன்படி, “இந்திய இருசக்கர வாகனப் பிரிவில் ஆக்டிவா புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மில்லியன் கணக்கான இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து வயதினரிடையேயும் பிரபலமடைந்து வரும் இது இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஸ்கூட்டர் ஆகும். இந்த புதிய லிமிடெட் எடிஷன் ஆக்டிவாவின் அறிமுகமானது எங்கள் வாடிக்கையாளர்களை, குறிப்பாக புதிய தலைமுறை வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.


Car loan Information:

Calculate Car Loan EMI