Automobile Sale June 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுன் மாதத்தில் விற்பனையில் சரிவை கண்டாலும், ஒட்டுமொத்தமாக மாருதி நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஜுன் மாத வாகன விற்பனை நிலவரம்:
இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனையானது ஜுன் மாதத்தில் கலவையாகவே அமைந்துள்ளது. மாருதி நிறுவனம் ஒட்டுமொத்த மாதாந்திர விற்பனையில் தொடர்ந்து முதலிடம் வகித்தாலும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது. மஹிந்திரா மற்றும் டொயோட்டா நேர்மறையான வளர்ச்சியை கண்டிருக்க, ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்கோடா மற்றும் கியா நிறுவனங்கள் வலுவான செயல்பாட்டை பதிவு செய்துள்ளன. இந்நிலையில், கடந்த ஜுன் மாதத்தில் ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி சுசூகி:
கடந்த ஜுன் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 993 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான விற்பனையுடன் ஒப்பிடுகையில், இது 6 சதவிகிதம் குறைவாகும். உள்நாட்டு விற்பனையும் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 918 யூனிட்களிலிருந்து, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 339 யூனிட்களாக 15 சதவிகிதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.
2. ஹுண்டாய் மோட்டார்
கடந்த ஜுன் மாதத்தில் ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் 60 ஆயிரத்து 924 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு சந்தைக்கான 44 ஆயிரத்து 24 யூனிட்களும், வெளிநாடுகளுக்கான 16 ஆயிரத்து 900 யூனிட்களும் அடங்கும். எஸ்யுவி வாகனங்கள் இந்த நிறுவனத்தின் பலமாக உள்ளது. உள்நாட்டு சந்தையில் விற்பனையான வாகனங்களில் 67 சதவிகிதம் எஸ்யுவி மட்டுமே ஆகும்.
3. டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்த உள்நாட்டு விநியோகத்தில் கடந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் விற்பனையான, 74 ஆயிரத்து 147 யூனிட்களில் இருந்து 12 சதவிகிதம் சரிந்து 65 ஆயிரத்து 19 யூனிட்களாக சரிந்துள்ளன. மின்சார வாகனங்கள் அடங்கிய பயணிகள் வாகன விற்பனையானது 15 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 37 ஆயிரத்து 83 யூனிட்களாக பதிவாகியுள்ளது. மாதந்திர வாகன விற்பனையில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக டாடா நிறுவனம் சரிவை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
4. மஹிந்திரா
மறுமுனையில் மஹிந்திரா நிறுவனம் ஜுன் மாதத்தில் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் விற்பனையான 40 ஆயிரத்து 22 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 18 சதவிகிதம் ஏற்றம் கண்டு 47 ஆயிரத்து 306 யூனிட்கள் கடந்த ஜுன் மாதம் விற்பனையாகியுள்ளன. அதோடு, 2 ஆயிரத்து 597 என்ற எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஏற்றுமதியானது 2 ஆயிரத்து 634 ஆக உயர்ந்துள்ளது.
5. டொயோட்டா கிர்லோஸ்கர்
டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் பதிவான 27 ஆயிரத்து 474 யூனிட் விற்பனையை காட்டிலும், 5 சதவிகிதம் அதிகரித்து கடந்த மாதத்தில் 28 ஆயிரத்து 869 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் எஸ்யுவி மற்றும் எம்பிவி வாகனங்களுக்கு சந்தையில் தொடரும் டிமேண்டே, இந்த விற்பனை அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
6. MG மோட்டார்
கடந்த ஆண்டின் கடந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் MG நிறுவனம் 21 சதவிகிதம் கூடுதல் விற்பனையை பதிவு செய்துள்ளது. விண்ட்சர் போன்ற மின்சார வாகனங்களுக்கு விற்பனை அதிகரித்து இருப்பதன் மூலம், நிறுவனம் 5 ஆயிரத்து 829 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
7. ஸ்கோடா
ஸ்கோடா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், இதுவரையில் இல்லாத சிறந்த முதல் 6 மாத விற்பனையை பதிவு செய்துள்ளது. அதன்படி, முதல் 6 மாதங்களில் 36 ஆயிரத்து 194 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் பதிவான 28 ஆயிரத்து 899 என்ற சிறந்த விற்பனைய முறியடித்து, நாட்டின் முதல் 7 கார் விற்பனையாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான கைலாக் ஸ்கோடா பெரும் வரவேற்பை பெற்று விற்பனையை ஊக்குவித்து வருகிறது.
8. கியா மோட்டார்ஸ்
கியா இந்தியா நிறுவனம் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1,42,139 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 1,26,137 யூனிட்களுடன் ஒப்பிடும்போது 12.7 சதவிகிதம் அதிகமாகும். கூடுதலாக, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள்" உலக சந்தையில் பிரபலமடைந்து வருவதாகவும், இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 11,813 வாகனங்களை ஏற்றுமதி செய்ததகாவும்” கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
9. ஹோண்டா கார்ஸ்
ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் மிதமான விற்பனையை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் 4 ஆயிரத்து 618 யூனிட்கள் மற்றும் வெளிநாட்டிற்கு 506 யூனிட்கள் ஏற்றுமதி என மொத்தம், 5 ஆயிரத்து 124 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI