IND vs ENG 2nd Test Shubman Gill: இங்கிலாந்தின் எட்க்பஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய, மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.
இந்தியா Vs இங்கிலாந்து 2வது டெஸ்ட்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற போட்டியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அபார வெற்றி பெற்றி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தான், எட்க்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, கில் தலைமையிலான இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்திய நேரப்படி நேற்று பிற்பல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்கியது.
கே.எல். ராகுல் ஏமாற்றம்:
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கருண் நாயரும் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனால் 95 ரன்களை சேர்ப்பதற்குள் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் கில் அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதன்படி, அதிரடியாக விளையாடி வந்த கில், 87 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 66 ரன்களை சேர்த்தது.
சதம் விளாசிய கேப்டன் கில்
மறுமுனையில் கில் நிலைத்து நின்று விளையாடினாலும், ரிஷப் பண்ட் 25 ரன்களிலும், நிதிஷ் குமார் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து விக்ஜ்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆனாலும், கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு பக்கபலமாக ஜடேஜா மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. அதன் விளைவாக கேப்டன் கில் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் விளாசி கவனத்தை ஈர்த்துள்ளார்.
எலைட் லிஸ்டில் கில்:
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த இந்திய வீரர்களின் அரிய பட்டியலில் கில் இணைந்துள்ளார். இளம் கேப்டன் முகமது அசாருதீன் (1984-85), திலீப் வெங்சர்க்கார் (1985–86) மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் உடனான பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். இதில் கில் 2002 மற்றும் 2008-11 ஆகிய தொடர்களின் போது, தொடர்ந்து மூன்று போட்டிகளில் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கில் இணைந்து இருப்பது, இந்திய அணியின் எதிர்காலம் வலுவாக இருப்பதை உணர்த்துகிறது.
இதை இன்னும் சிறப்பாக்குவது என்னவென்றால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த மூன்றாவது இந்திய கேப்டன் கில் ஆவார். விஜய் ஹசாரே - 1951-52ல் டெல்லி மற்றும் பிராபோர்னில் சதம் அடித்தார். தொடர்ந்து அசாருதீன் 1990ல் லார்ட்ஸ் மற்றும் ஓல்ட் டிராஃபோர்டில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கேப்டனாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் எலைட் பட்டியலிலும் கில் இணைந்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய பெயர்கள் சில உள்ளன. கேப்டனாக முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலி, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கரின் வரிசையில் கில் இணைந்துள்ளார்.
பாரத் ஆர்மி சம்பவம்:
இதனிடையே, முதல் நாள் போட்டியின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்களை சேர்த்துள்ளது. கில் 114 ரன்களுடன், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, 76வது ஓவரின் போது கில்லிற்கு முதுகில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் விரைந்து களத்திற்கு வந்து கில்லிற்கு முதலுதவி அளித்தார். 4 முதல் 5 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சிகிச்சையால், பொறுமை இழந்த இங்கிலாந்து ரசிகர்கள் கூச்சலிட தொடங்கினர். விரைந்து கில் பேட்டிங்கிற்கு திரும்ப வேண்டும் என கிண்டலடித்தனர்.
இதனிடையே, மீண்டும் பேட்டிங்கிற்கு திரும்பிய கில் பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தார். அதிரடியாக ஆடி வரலாற்று சிறப்புமிக்க சதத்தை பூர்த்தி செய்ய, ஒட்டுமொத்த மைதானமும் கரவொலியால் அதிர்ந்தது. கிண்டலடித்தவர்கள் காணாமல் போயினர்.