Innova Hycross 5 star BNCAP: பாதுகாப்பிற்கான க்ராஷ் டெஸ்டில் டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் 5 ஸ்டார்களை பெற்று இருப்பது அதன் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
ரொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் - 5 ஸ்டார்
கார் வாங்கும்போது பரிசீலிக்கப்படும் அம்சங்களில் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் தான், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலானது, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாரத் NCAP (New Car Assessment Program) டெஸ்டில் 5 ஸ்டார் குறியீட்டை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் என இரண்டு தரப்பினருக்குமான பாதுகாப்பு அம்சங்களிலும், பாராட்டுதலுக்குரிய வகையில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில், இந்த எம்பிவி வாகனமானது 32-க்கு 30.47 மதிப்பெண்களையும், சிறுவர்களுக்கு 49-க்கு 45 மதிப்பெண்களையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் நம்பர் ஒன்:
மேற்குறிப்பிடப்பட்ட மதிப்பெண்கள் மூலம் இந்தியாவின் க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைகளில், அதிக மதிப்பெண்களை பெற்ற காராக ஹைகிராஸ் உருவெடுத்துள்ளது. டொயோட்டாவின் TNGA-C பிளாட்ஃபாமில் உருவாக்கப்பட்டதே, ஹைகிராஸ் கார் மாடல் இந்த சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மிகவும் முக்கியமான பாதுகாப்பான அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி மேம்படுத்தியதன் விளைவாகவும் இந்த முடிவுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சோதனையில் பங்கேற்ற வேரியண்ட்கள்:
பாதுகாப்பை உறுதி செய்வதற்கான க்ராஷ் டெஸ்டில், பெட்ரோல் GX 8 சீட்டர், ஹைப்ரிட் VX சீட்டர் மற்றும் ZX 7 சீட்டர் ஆகிய வேரியண்ட்கள் பயன்படுத்தப்பட்டன. முன்புற பாதுகாப்பு சோதனையில், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணி, நிலையான ஏர் பேக்குகள், பெல்ட் ப்ரீ டென்சனர்ஸ், முன்புற சீட்பெல்ட் உதவிகள் இல்லாவிட்டாலும் லோட் லிமிட்டர்ஸ் ஆகியவை பாதுகாப்பை அளிக்கின்றன. அதேநேரம், இதில் முழங்கால்களுக்கான ஏர் பேக்குகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது. பக்கவாட்டில் மூன்று வரிசை இருக்கைகளுக்கும் கர்டெயின் ஏர்பேக்குகள் பாதுகாப்பை வழங்குகின்றன.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள்:
குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் ISOFIX மவுண்ட்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருந்தாலும், முன்பக்கத்தில் அமைப்பதற்கான வசதி இல்லை. இதுபோக எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பெடெஸ்ட்ரியன் ப்ரொடெக்சன் சிஸ்டம் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்ஸ் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
டாடா, மஹிந்திராவிற்கு டஃப் கொடுக்கும் டொயோட்டா
டாடாவின் ஹாரியர் மின்சார எடிஷன், மஹிந்திராவின் XEV 9e ஆகிய கார் மாடல்களும், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸை போன்றே பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளன. இந்த மூன்று கார்களிலும் 6 ஏர் பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்பட்டுள்ளதோடு, ADAS தொழில்நுட்ப அம்சமும் இடம்பெற்றுள்ளது. XEV மற்றும் ஹாரியர் கார் மாடல்கள் ஹைகிராஸ் உடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருந்தாலும், போட்டியாளர்களுக்கு இணையாக குழந்தைகளுக்கான பாதுகாப்பில் டொயோட்டா அசத்தியுள்ளது. அதேநேரம், பெரியோர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் மற்ற இரண்டு கார்களின் பாதுகாப்பு அம்சங்களும் சற்றே மேலோங்கி உள்ளன.
BNCAP டெஸ்டில் சோதிக்கப்பட்ட டொயோட்டோவின் முதல் ஹைப்ரிட் மாடல் இது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல கார்கள் சரியான 5 ஸ்டார் அந்தஸ்தை பெற்றாலும், மதிப்பெண் சற்று மாறுபடலாம். ஆனால், ஹைகிராஸ் கார் டொயோட்டா நிறுவனம் வழங்கும் பாதுகாப்பின் அடிப்படையில் முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
இன்னோவா ஹைகிராஸ்: பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக்குகள், வெஹைகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், TPMS ஆகியவற்றோடு லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர், ஆட்டோமேடிக் ஹை பீம் மற்றும் ரியர் க்ராஸ் ட்ராஃபிக் அலெர்ட் உள்ளிட்ட ADAS அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இன்னோவா ஹைகிராஸ்: தொழில்நுட்ப அம்சங்கள்
அம்சங்கள் அடிப்படையில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே / ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய பெரிய 10.1 இன்ச் அளவிலான மிதக்கும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், ட்ரைவர் சீட்களுக்கு மெமரி ஃபங்சன், ஆம்பியண்ட் லைட்டிங், பவர்ட் டெயில்கேட், ரியர் சன்ஷேட், 360 டிகிரி கேமரா, செமி டிஜிட்டல் கிளஸ்டர், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரொல், இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கு பவர்ட் லெக் ரெஸ்ட், க்வில்டட் லெதர்ட் சீட்ஸ், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் என பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இன்னோவா ஹைகிராஸ்: இன்ஜின் விவரங்கள்
இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலானது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 2.0 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆனாது e-ட்ரைவ் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களுமே ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் ஆப்ஷன்களை மட்டுமே கொண்டிருக்க, மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் என்பதும் கிடையாது. ஹைப்ரிட் வேரியண்ட் லிட்டருக்கு 23.24 கிலோ மீட்டர் மைலேஜும், வழக்கமான பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 16.13 கிலோ மீட்டர் மைலேஜுன் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னோவா ஹைகிராஸ்: விலை விவரங்கள்
இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலானது 11 வேரியண்ட்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கிறது. இதன் விலை சென்னையில் ரூ.25.01 லட்சத்தில் தொடங்கி ரூ.41.28 லட்சம் (ஆன் - ரோட்) ரூபாய் வரை நீள்கிறது. இந்த கார் உள்நாட்டு சந்தையில் மாருதி சுசூகி இன்விக்டோ, மஹிந்திரா XUV700, டாடா சஃபாரி மற்றும் கியா கார்னிவெல் ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI