ஆட்டோ எக்ஸ்போ 2023


பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் 11ம் தேதி தொடங்கி, 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற உள்ளது. காலையில் அப்பகுதியில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் சூழலில், அங்குள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது.


போக்குவரத்து வசதி, கட்டண விவரம்:


பொதுமக்கள் சிரமமின்றி எளிமையாக வர வேண்டும் எனும் நோக்கில்,  மெட்ரோ இணைப்பு உள்ளிட்ட  பொதுப்போக்குவரத்து வசதி கொண்ட பகுதியில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. பார்வையாளர்களுக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் விற்கப்படும் சூழலில், வார இறுதி நாட்களில் 475 ரூபாய்க்கும்,  வார நாட்களில் 350 ரூபாய்க்கும் இந்த டிக்கெட்கள் கிடைக்கின்றன. 


நேரக்கட்டுப்பாடு: 


ஆட்டோ எக்ஸ்போ தொடங்கும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில், ஊடகங்களுக்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களது வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளன. அதைதொடர்ந்து 13 முதல் 18ம் தேதி வரையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில், 13ம் தேதியன்று பிசினஸ் டிக்கெட் கொண்டவர்கள் மட்டும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.  ஜனவரி 14 மற்றும் 15 தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், ஜனவரி 16ம் தேதி முதல் 17ம் தேதி வரையில்  காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையிலும் பார்வையளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியின் கடைசி நாளான ஜனவரி 18 ஆம் தேதி,  மாலை 6 மணியுடன் கண்காட்சி நிறைவடைய உள்ளது.


 


பங்கேற்கும் நிறுவனங்கள்:


பல்வேறு சொகுசு கார்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்க உள்ளன. அதன் மூலம் பல்வேறு புதிய வாகனங்களை காட்சிப்படுத்த உள்ளன.


புதிய வெளியீடுகள் என்ன?


உலகளாவிய வெளியீடுகள் மற்றும் சில பெரிய திட்டங்களின் வெளியீடுகளின் அடிப்படையில் ஏராளமான நடவடிக்கைகள் ஆட்டோ எக்ஸ்போவில் இருக்கும். உதாரணமாக,  மாருதி நிறுவனம் அதன் மின்சார SUV கான்செப்ட்டை வெளியிடுவதோடு,  ஜிம்னி உட்பட இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது பிரிமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் மூலம் அறிமுகம் செய்யவுள்ளது.


கியா அதன் உலகளாவிய வரம்பில் உள்ள மற்ற கார்களை காட்சிப்படுத்துவதோடு,  அதன் மின்சார காரின் கான்செப்டையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. MG நிறுவனம் நகர அமைப்பிற்கு ஏற்ற ஒரு தனித்துவமான மின்சார காரையும் காட்சிப்படுத்த உள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போ 2023 இயங்குதளத்தைப் பயன்படுத்தி அதன் மின்சார வாகனங்களை நடப்பாண்டின் பிற்பகுதியில் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. டொயோட்டா மற்றும் BYD போன்ற நிறுவனங்கள் அதன் உலகளாவிய சந்தையிலிருந்து பல கார்களை பார்வைக்கு வைக்க உள்ளது. அதோடு,  லெக்ஸஸ் அதன் RX SUV காரையும், ஆட்டோ எக்ஸ்போ 2023ல் அறிமுகப்படுத்த உள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI