நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும், இந்த எரிபொருள் பயன்பாட்டின் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது. மும்பையின் நவி மும்பை பகுதியில் உள்ள கண்டா காலனியில் உள்ள 58 வயதான உமேஷ் ஷ்ரீபாத் அலோன் என்பவர் தனது சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றியுள்ளார். அவர் தற்போது தனது எலக்ட்ரிக் சைக்கிளைப் பயன்படுத்தி அலுவலகம் சென்று வருவதோடு, நேரம், பணம் ஆகியவற்றை மிச்சப்படுத்துவதோடு சூழலுக்குப் பாதுகாப்பாகவும் செயல்பட்டு வருகிறது. 


மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மின்சாரத்துறையின் பெலாப்பூர் கிளையில் பணியாற்றும் மூத்த தொழில்நுட்ப வல்லுநர் உமேஷ் ஷ்ரீபாத் அலோன் தன் அலுவலகத்திற்குச் சென்று வருவதற்காக எலக்ட்ரிக் சைக்கிளைத் தானே உருவாக்கியுள்ளார். தனக்குத் தேவைப்படும் நேரத்தில் பெடல் செய்வது, தேவைப்படும் நேரத்தில் பேட்டரி பயன்படுத்துவது என விருப்பத்திற்கேற்ப அவர் தனது எலக்ட்ரிக் சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார். 



பல ஆண்டுகளாக தனது சைக்கிளில் அலுவலகம் சென்று வந்தார் உமேஷ் ஷ்ரீபாத். தன் வயது அதிகரிக்க, நேரமும் உடல் உழைப்பும் அதிகம் பயணித்தில் செலவாவதை உணர்ந்த அவர், `சாதாரண சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றுவது குறித்து யூட்யூப் தளத்தில் நான் சில வீடியோக்களைப் பார்வையிட்டேன். வாகனத்திற்கான பேட்டரிகள், எலக்ட்ரிக் மோட்டார், பிற உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்காக சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, ஊரடங்கின் போது என் சாதாரண சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றினேன்’ என்று இதுகுறித்து கூறுகிறார். 


தற்போது இந்த எலக்ட்ரிக் சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதில் சுமார் 50 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். மேலும், இதன் அதிகபட்ச வேகமாக ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோமீட்டர் பயணிக்கலாம் எனக் கூறப்படுகிறது.


இந்த எலக்ட்ரிக் சைக்கிளைக் கடந்த ஒரு ஆண்டாக உமேஷ் ஷ்ரீபாத் பயன்படுத்தி வந்தாலும், கடந்த டிசம்பர் மாதம் இந்தக் கதை பிரலமானது. மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மின்சாரத்துறை நடத்திய மின் வாகனங்கள் கண்காட்சியில் இந்த மாடல் சைக்கிளும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உமேஷின் முயற்சிகள் வெகுவாகப் பாராட்டப்பட்டு, இறுதியில் அவருக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன. 



இந்த சைக்கிளின் மின் பயன்பாடு குறித்து பேசும் உமேஷ் இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு சுமார் 2 யூனிட் மின்சாரம் செலவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். `2 யூனிட் மின்சாரத்தை 8 ரூபாய்க்குப் பெறுவதோடு, அதனைப் பயன்படுத்தி என் சைக்கிளில் 50 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்’ எனக் கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். 


தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட போது அவர், `நான் டிசம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளேன். அதன்பிறகான ஓய்வு நேரங்களில் இந்த சைக்கிளைப் பயன்படுத்தும் போதே, அதிலுள்ள மோட்டார் சார்ஜ் செய்யும் விதமாக மாற்ற முயற்சிக்கவுள்ளேன்’ எனக் கூறுகிறார்.


 


Car loan Information:

Calculate Car Loan EMI