Snake In Dream: கனவில் பாம்பு வருவதன் காரணங்கள் என்பது பற்றி கீழே முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
கனவில் பாம்பு:
அன்பார்ந்த abp நாடு வாசகர்களே விளங்குகள் கனவில் வருவது இயல்பாக நடக்கின்ற ஒன்றுதான். சிலருக்கு நாய்கள் கனவில் வரும் சிலருக்கு பறவைகள் கனவில் வரும் சிலருக்கு வீட்டில் வளர்க்கக்கூடிய பூனைகள் கனவில் வரும் . ஆனால் சம்பந்தமே இல்லாமல் பலருக்கு பாம்புகள் கனவில் வந்திருப்பதை உணர்ந்திருப்பார்கள். இதை வாசிக்கின்ற உங்கள் கனவில் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் பாம்பு கனவில் வந்திருக்கலாம். இப்படி பாம்பு வந்தால் அது எதை குறிக்கிறது ?
ஆழ் மனதின் பயம் தான் “ பாம்பு “ ?
உங்களை அறியாமலேயே நீங்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த சமயத்தில் உங்கள் மூளை ஏதோ ஒரு விஷயத்தை சிந்திக்கிறது. அப்படி சிந்திக்கும் நிலையில் நீங்கள் எதையோ கண்டு பயப்படுகிறீர்கள். அந்த பயம் பாம்பு வருவதன் மூலம் வெளிப்படுகிறது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று இரவு இரண்டு மணி அளவில் இருந்து பாம்பு பாம்பு என்று கத்தினாராம். அப்படி கத்தும் சமயத்தில் அவருக்கு அதிக படியான ரத்தக் கொதிப்பு உண்டாகி உடல் முழுவதும் வியர்த்துப் போய் மருத்துவரை அணுகி அதை சரி செய்வதற்கு மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டன. இப்படியான சூழ்நிலையில் பாம்பு கனவில் வந்ததால் அவர் கத்தி அதன் மூலம் அவருக்கு நோய் வந்ததா அல்லது நோய் வருவதற்கு முன்பாகவே அதன் அறிகுறியாக பாம்பு கனவில் வந்ததா எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
நிச்சயமாக ஒரு விஷயத்தில் நாம் நம்பிக்கை கொள்ளலாம். உங்களுடைய எதிர்காலம் குறித்து உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், வரப்போகிறவை நல்லவையா அல்லது கெட்டவையா என்று உங்கள் ஆழ்மனதில் நிச்சயமாக ஒரு பதிவு இருந்து கொண்டே இருக்கும். அது நடக்கின்ற நிகழ்வை வைத்து உங்கள் மனது ஒரு கணக்குப் போட்டு அதன் மூலம் சம்பவத்தை கணிக்க கூடிய சக்தியை பெற்றிருக்கும். இப்படியான சக்திகள் நீங்கள் விழிப்புடன் இருக்கும்போது வெளிப்படாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது கனவாக வெளிப்பட்டு அதுவும் பாம்பு போன்ற பயமுறுத்தக்கூடிய நிகழ்வுகளாக வெளிப்பட்டு அதன் மூலம் சில சமிக்ஞைகளை உங்களுக்கு உணர்த்தக் கூடும். சரி வாருங்கள் மீண்டும் பாம்பு கனவில் வந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்பதை பார்க்கலாம்…
பாம்பு துரத்தினால் என்ன பலன் ?
பாம்பு ஒருவரை துரத்துவது போல கனவு கண்டால் எதையோ கண்டு நீங்கள் பயந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். சில சமயங்களில் நீங்கள் தைரியம் இல்லாமல் கோழையாக செயல்படுகிறீர்கள் என்று கூட புரிந்து கொள்ளலாம். உண்மையில் வெளி உலகத்தில் நீங்கள் வீரராக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய ஆழ் மனதில் ஏதோ ஒரு சம்பவம் உங்களை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த பயம் பாம்பு துரத்துவதன் மூலம் வெளிப்படுகிறது.
உங்களுக்குத் தெரியாமல் பாம்பு அருகில் இருப்பதாக கனவு?
நீங்கள் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள் அந்த சமயத்தில் ஏதோ ஒரு இடத்தில் பாம்பு உங்கள் அருகில் படுத்திருப்பது போல கனவு வந்தால், அந்த கனவின் சம்பவங்கள் உங்களை பெரிதாக பாதிக்காது. நிஜ வாழ்க்கையில், குறிப்பாக பாம்பு அருகில் இருப்பதைப் போல கனவு கண்டால் அது வெறும் உங்கள் மனப்பிரம்மையாக இருக்கக்கூடும். நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு பெரிதாக எந்த ஒரு ஆபத்தும் நிகழ்ந்து விடாது. நீங்களாகவே கற்பனையில் ஏதோ ஒரு பெரிய ஆபத்து உங்களுக்கு நேரிடப்போவதாக நிஜ வாழ்க்கையில் எண்ணிக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒன்றும் நேரிடாது…
பாம்பு கடித்தால் என்ன பலன் ?
ஒருவேளை கனவில் பாம்பு உங்களை கொத்தினால் நிச்சயமாக அது நல்லது. ஏற்கனவே இருந்த கஷ்டங்கள் விலகி சந்தோஷங்கள் பெருகும். நீங்கள் பிரச்னையை சமாளிக்க கூடிய சக்தியை பெற்று விட்டீர்கள் என்று அர்த்தம். அடுத்த கட்டத்திற்கு உங்களுடைய வாழ்க்கை நகரப் போகிறது என்று புரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் கோடீஸ்வரராக கூட ஆகலாம். அதற்காக நீங்கள் பாம்பு நிஜத்தில் கொற்றினாலும் அப்படியே நடக்கும் என்பது இல்லை நிஜத்தில் பாம்பு கொத்தினால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள்.
பாம்பு காலை சுற்றுவது போல இருந்தால் என்ன பலன் ?
பாம்பு உங்கள் காலை சுற்றிக் கொண்டிருப்பது போல கனவு கண்டால் பிரச்னையின் மூலம் நீங்கள் வெற்றி காண போகிறீர்கள் என்று அர்த்தம். எந்தப் பிரச்னையை கண்டு நீங்கள் பயந்திருக்கிறீர்களோ, அந்த பிரச்னையின் மூலம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வரப்போகிறது என்று புரிந்து கொள்ளலாம் .
பாம்பு உங்களை கடந்து சென்றால் என்ன பலன் ?
அன்பார்ந்த வாசகர்களே கனவு கண்டு கொண்டிருக்கும்போது நீங்கள் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள் மறுபடியும் பாம்பு உங்களை எந்த விதத்திலும் தீண்டாமல் கடந்து சென்றால் அது நல்லது. எந்த பிரச்சனையிலும் நீங்கள் சிக்காமல் தப்பிக்க போகிறீர்கள் என்பதை காட்டுகிறது. குறிப்பாக குலதெய்வத்தின் அனுக்கிரகம் உங்களுக்கு இருப்பதால் எந்த ஒரு தீங்கும் நிகழப் போவதில்லை என்பது தெரிய வருகிறது.