தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை எங்கு உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா...தாய் தெய்வ சிலையை காண சென்னையில் இருந்து திண்டிவனம் ,செஞ்சி வழியாக திருவண்ணாமலை வரவேண்டும். பின்னர் அரூர் செல்லும் சாலையில் தண்டராம்பட்டு அடுத்த 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலமஞ்சனுர் கிராமத்தில் வலதுபுறம் திரும்ப வேண்டும் . அதன் பின்னர் அங்கு இருந்து 3 கிலோமிட்டர் தொலைவில் புதூர் கிராமம், அதனுடன் 3 கிலோமிட்டர் தொலைவில் டி. வேலூர் கிராமம் வலதுபுறம் சாலையில் ஏரிக்கரை சாலையில் 1 கிலோமீட்டர் தொலைவில் தா. மோட்டூர் கிராமம். அதில் இருந்து வயல்வெளி பகுதியில் கம்பீரமாக காட்சி தருவாள் "தாய் தெய்வசிலை".
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்பெண்ணை ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள மேட்டூர் கிராமத்தின் மலைக்குச் செல்லும் வழியில் பசுமை படர்ந்த வயல்வேலி பகுதியில் பழங்கால சிலையான தமிழ்நாட்டின் மிகப் பழமையான முதல் வழிபாட்டு சிலையாக தாய் தெய்வ சிலை அமைந்துள்ளது. தெய்வச்சிலைக்கு கோயில் இல்லை ஆனால், சிலை வழிபாடு நடக்கிறது. அவ்வூர் மக்களால் அதனை கூத்தானண்டவர் என கூறி வழிபாடுகள் நடக்கின்றது. அதனைப் பற்றிய வரலாறு சிறப்பம்சங்களும் பார்ப்போம்.
பெருங்கற்கால பண்பாட்டின் விளைவாக தோன்றிய தா.மோட்டூர் சிலை தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை என்பதும், தொடர்ந்து சுமார் 3000 ஆண்டுகளாக வழிபாட்டில் உள்ளது. என்பதும் சிறப்புக்குறிய செய்தியாகும். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் இந்த தா.மோட்டூர். மனிதஉருவொத்த சிலைக்கு உண்டு. சிந்துவெளி பண்பாட்டிற்குப் பிறகு கிடைக்கப்பெறும் சிலைகளில் இவ்வகையான மனித உருவொத்த சிலைகள் (Anthropomorphic figures) காலத்தால் மூத்த சிலைகள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஐரோப்பாவில் இவ்விதமான சிலைகளின் தோன்றிய காலம் பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டதாக குறிக்கின்றனர்.
தாய் தெய்வ சிலை
மோட்டூர் கிராமத்தில் 60 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் கிடைத்தன. இதில் பெரும்பான்மையானவை காலப்போக்கில் அழிந்து விட்டது. இவற்றில் தனித்துவமானதாக இந்த சிலையாக அமைந்துள்ளது. "தாய்தெய்வ" மனித உருவத்தையொத்த அமைப்புகளுடன் காணப்படுகிறது . இந்த சிலை 10 அடி உயரமும், 5 அடி அகலம் 6 அடி கனமும் கொண்டுள்ளது. ஆனால் இந்தசிலை ஆண், பெண் என்ற பாலின வேறுபாடுகள் அமைந்துள்ளது. இதற்கு பெண்கள் போன்ற அமைப்புகளோ இல்லை. அமர்ந்த நிலையில் இரண்டு பெரிய கால்களும் நீண்ட தோள்களும் கையை நீட்டியவாறு அமைந்துள்ளது. இவ்வகையான சிலைகளை தொழிலாளர்கள் உருவ சிலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
தாய்த்தெய்வ சிலையின் வரலாறு
சிந்து சமவெளி நாகரிகதீர்க்கும் பின்னர் பெருங்கற்கால மக்கள் இறந்தவர்களை தாழியில் அடைத்து புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் புதைத்த இடங்களில் அடையாளமாக வட்டமாக கற்களை அமைக்கும் வழக்கமும் இருந்தது. வட்ட வடிவ அமைப்புகள் மக்களின் வழக்கம் இம்மக்கள் வாழ்ந்த காலத்தில் இறந்துபோன தமது மூதாதையர்களை வணங்கும் வழக்கம் தோன்றியது இருப்பதால் இறந்த இடத்தில் இக் கல்லினை வைத்து வணங்கி வந்துள்ளனர்.
இந்த சிலை பற்றிய வரலாறு கண்டு பிடிப்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய தொல்லியல் துறையில் ஆய்வாளராக இருந்த பி.நரசிம்மையா முயன்றார். 1978-1979 கால கட்டத்தில் ஒரு வருடக்காலமாக வட்டங்களில் அகழ்வாய்வு நடத்திய நரசிம்மையாவுக்கு, பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு நிற மண்கலன்கள், தாங்கிகள், கிண்ணங்கள் போன்ற தொல்லியல் படிமங்கள் கிடைத்துள்ளன. பெருங்கற்காலத்தில், இறந்தவர்களுக்கான தாழிகளைப்போல பயன்படுத்தப்பட்ட, கால்களைக்கொண்ட அமைப்புடைய ஈமப்பேழை ஒன்றையும் அவர் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நரசிம்மையாவுக்குப் பிறகு, பல அறிஞர்களும் இந்தப் பகுதியை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
தாய்தெய்வ சிலையினை பற்றி அந்த ஊர் மக்கள் ஒரு சிலரிடம் கேட்டோம், ‛ கூத்தணார் அப்பன் என்று அழைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவதாக கூறினர்கள் .பின்னர் அவர்கள் ஆடி மாததில் ஞாயித்துக்கிழமை இல்லைன்னா மூணாவது ஞாயித்துக்கிழமை திருவிழா போன்று நடத்திடுவோம்.கூத்தாண்டவருக்கு ஊர் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கிராமத்தில் இருக்கிற ஒவ்வொரு வீட்டுல் இருந்தும் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வந்து. எண்ணெய், சீயக்காய் தடவி நல்லா தேய்ச்சி சிலையை சுத்தம் செஞ்சிடுவோம். பின்னர் 108 குடம் தண்ணியை வரிசையா வெச்சிக்குவோம். ஏணி போட்டு ஏறி ஒவ்வொரு குடமா எடுத்து சாமிக்கு பால், தயிர், சந்தனம் போன்ற அபிஷேகம் செய்வோம். அதன்பிறகு , மஞ்சள், குங்குமத்தில் பொட்டு வைத்து மாலை அணிவித்து அதன்பின்னர் ஆடு, பன்னி, கோழியைப் பலி கொடுத்து முப்பூசை நடத்தி சாமிக்குப் படையல் போடுவோம்,’ என தெரிவித்தனர். ஆனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இந்த தாய் சிலையின் வரலாறு அறியாமல் இதனை கூத்தான்டவர் என நினைத்து வழிப்பட்டு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்த தாய் தெய்வ சிலை திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சார்ந்த 'பால முருகனிடம்" கேட்டோம், இந்திய தொல்லியல் துறை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தாய்ச் சிலையை அறிவித்தது. சிலையின் பாதுகாப்புக் கருதி சேதப்படுத்தினாலோ, அதன் தோற்றப்பொலிவைச் சீர்குலைத்தாலோ ஒரு லட்சம் அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று எச்சரித்து அருகிலேயே பலகையும் வைத்திருக்கிறது.
தாய் தெய்வம் என்பது உருவ வழிபாட்டுக்கெல்லாம் முந்தையது. பெருங் கற்காலத்தில் வாழ்ந்த மக்கள், இறந்தவர்களின் உடலுக்கு உரிய மரியாதை செலுத்தி நினைவுச் சின்னங்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதிலிருந்து, அவர்களின் வாழ்க்கை முறை, அணிகலன்கள், புழங்குப் பொருள்கள், வழிபாடு உள்ளிட்ட வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கின்றன. அப்படியானதொரு வரலாற்றுச் சிற்பம்தான் தா.மோட்டூரிலுள்ள தாய் தெய்வக்கல். பார்ப்பதற்கு விசிறி மாதிரி இருப்பதால் சிலர் விசிறி கல் என்கிறார்கள். உண்மையில், ஆதிகால மனிதனின் வாழ்வியலுக்கு இந்தச் சிலையே சிறந்த சான்று. பலகை போன்று சிலை இருப்பதால் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். கூத்தாண்டவரோ, தாய் தெய்வமோ... எந்தப் பெயர் வைத்து வணங்கினாலும், இது தமிழர் வரலாற்றைக் கூறும் அரியவகை சிற்பம். தமிழகத்தில், வேறெங்கும் இதுபோன்ற சிலை கிடைக்க வில்லை என நினைக்கிறேன். இங்கு ஆய்வு செய்தால், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழன் எப்படியெல்லாம் வாழ்ந்துள்ளான் என்பதைக் கண்டறிய முடியும்’’ என்று தெரிவித்தார்.
மிகவும் தொன்மை வாய்ந்த இந்த "தாய் தெய்வ சிலையை" முறையாக பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி அச்சிலையை காண பல வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிமாநிலத்தினரும் வந்து இந்த அற்புதமான சிலையை கண்டு வழிபாடு செய்து செல்கின்றனர்