மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதுபோன்று இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார்.
இந்தகோவிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் 23 ஆண்டுகளுக்கும் பின்னர் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியின்படி, வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் திருப்பணியை தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைகழகம் 5 கிலோ தங்கம் காணிக்கையாக வழங்கினார்.
இந்த தங்ககட்டிகள் தகடுகளாக மாற்றும் வகையிலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொடிமரத்திற்கு தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டு அவற்றை கொடிமரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுவதுமாக தங்கத்தால் கொடிமரம் பொருத்தப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கி நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி , தீபாரதனை காண்பிக்கப்பட்டு, புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.