இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே திருப்பதி கோயிலில் சாமியை தரிசனம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்தது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு பிறகு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.


300 ரூபாய் கட்டணத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு உள்ளூர் மக்களுக்கு மட்டும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி முதல்  அனைத்து மாநில பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  நாடு முழுவதும் உள்ள பக்தர்களுக்கு இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயிலில் இரவு 11.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2000 இலவச தரிசன டிக்கெட்டுகள், 8,000 இலவச டிக்கெட்டுகளாக  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தேவஸ்தானம் தெரிவித்தது. புரட்டாசி மாதத்தில் ஏழை பக்தர்கள் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியுமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 






இந்த நிலையில், திருமலை - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ்களையும் காண்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 25ஆம் தேதி முதல் ஆன்லைனில் இலவச தரிசன டிக்கெட் பெறலாம் என்றும் திருமலை - திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, திருப்பதியில் நேரில் வழங்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக இலவசமாக டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில்  அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியிருந்தார்.


மேலும், அடுத்த மாதம் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது கோயிலில் தினமும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.


திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக திமுக எம்எல்ஏ நியமனம்!