தமிழ்நாட்டின் தென்கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்தநிலையில், இலங்கையை சேர்ந்த தமிழர்கள் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வந்து விமானம் மூலம் கனடாவிற்கு செல்வது அதிகரித்துள்ளது குறித்து தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

                                       

                                                                                 

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு படகில் வந்து மங்களூருவுக்கு சென்று அங்கிருந்து கனடாவுக்கு செல்ல முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதே மாதத்தில் இதே போன்று சட்டவிரோதமாக படகு மூலம் வந்து மதுரையில் இருந்த 27 இலங்கை தமிழர்களை ஃக்யூ பிரிவுபோலீசார் கைது செய்தனர். இந்த 27 பேரிடம் மதுரை ஃக்யூ பிரிவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் படகு மூலம் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்ததும், பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கை நாட்டை சேர்ந்த 27 பேர் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்தது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் கருத்தக்கண்ணு, சாக்ரடீஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


                           

                                                       

இலங்கையை சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனடிப்படையில் மதுரை ஃக்யூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர். 

                               


                                                                             
  

இந்நிலையில் மங்களூரில்  இலங்கையை சேர்ந்த 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்காக  தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 4 பேர் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர். வைப்பார் முதல் தூத்துக்குடி வரை உள்ளிட்ட இடங்களில் வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்களை தனியாக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தமிழகம் வந்தது எப்படி, இந்த சட்டவிரோத வருகைக்கு உதவி புரிந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.