கொரோனா தொற்றால் கூட்டம் குறைந்ததால், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அரை மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். 


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உண்டியல் வருமானமும் குறைந்துள்ளது.


திருமலை திருப்பதில் தேவஸ்தானம் கொரோனா அதிகரிப்பால் இலவச தரிசன முறையை ரத்து செய்துள்ளது.  சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி  சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மட்டுமே தற்போது சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்த பக்தர்கள் அனைவரும் 30 நிமிடத்தில் சாமியை தரிசனம் செய்துவிட்டு வருகின்றனர்.


திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பல மணி நேரம், சில கட்டண டிக்கெட்டுகளில் சில மணி நேரம் ஆகும். விஐபி தரிசனத்தில் மட்டுமே வெகுவிரைவில் சாமியை தரிசித்து வரலாம். ஆனால், தற்போது அனைத்து பக்தர்களும் விஐபி பக்தர்களை போலவே, சாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வருகின்றனர். கியூவில் நுழைந்தது முதல் எந்த தொந்தரவும், கூட்ட நெரிசலும் இல்லாமல் பக்தர்கள் நிம்மதியாக சாமியை தரிசித்து வருகின்றனர்.




மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படும் என்பதால், திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதும். சாமியை தரிசனம் செய்வதற்கு, அறைகள் கிடைப்பதற்கு பெரும் சிரமமாக இருக்கும். ஆனால், கொரோனா அச்சத்தால், கடந்தாண்டு முதல் திருப்பதி கோயிலில் கூட்டம் குறைந்துள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சிறிது நாட்களுக்கு கூட்டம் சிறிது அதிகரித்து, உண்டியல் வசூலும் கூடியது. கொரோனா இரண்டாவது அலை தாக்கதால் மீண்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது.


முன்னதாக, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 300 ரூபாய் சிறப்பு டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என்றும், பக்தர்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு தினத்தை மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டும். அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திருப்பதி போன்ற பிரசித்தி பெற்ற கோவிலில் டிக்கெட் கிடைப்பதே பெரிய குதிரை கொம்பாக இருக்கும். அப்படிபட்டி கோவிலில் இன்று எந்த நெரிசலும் இல்லாமல் மனதார வழிபாடு நடத்தும் அளவிற்கு கொரோனா சூழலை மாற்றியுள்ளது. இது திருப்பதி செல்லும் பக்தர்களுக்கே ஆச்சரியத்தை தருகிறது. பலமுறை கோவிலுக்கு வந்தவர்களுக்கு கூட்டம் இல்லாத இந்த புதிய நிலை, புதுவிதமான அனுபவத்தை தந்துள்ளது.