திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அண்ணாமலையார்தான், உலகப் பிரசித்தி பெற்ற சிவன் கோவில், பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலம் என்பதுதான் நினைவுக்கு வரும். அக்னி ஸ்வரூபமாக நம்பப்படும் திருவண்ணாமலையில், பல்வேறு பழைய சிறப்புகள் பலருக்கும் புதியதாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் பவழக்குன்று. பலரின் நம்பிக்கைகள் நிறைந்த ஒரு கோவிலாக அமைந்துள்ளது. சிவன் கோயில், பின் புறத்தில், காட்சியளிக்கும் மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2668 அடி உயரம் கொண்டவை. அதில் சிறியதொரு மலைக்குன்றுதான் பவழக்குன்று. இந்த குன்று இருக்கும் இடத்திற்கு செல்ல, திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கமாகவோ பேருந்து மூலமாகவோ செல்லவேண்டும்.
திருவண்ணாமலை வந்தடைந்த பிறகு, நீங்கள் எந்த உயரமான இடங்களில் இருந்து பார்த்தாலும், கோபுர உச்சியை தரிசிக்க முடியும். பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையில் சிறிது தூரம் சென்றால், சின்னக்கடை தெரு வரும். இந்த தெருவில் நடக்கும்போது வலதுபுறமாக திருவண்ணாமலை மலைக்கு செல்லும் வழி தெரியும், அதேபுறம் தான் பவழக்குன்றும் அமைந்துள்ளது. ஏறக்குறைய 250 படிகட்டுகளை கடந்தால் எளிதில் அடைந்துவிடலாம் பவழக்குன்றின் உச்சியை. செல்லும் வழியில் தாகத்துக்கு, அங்கு அற்புதமான அருவி ஒன்று உள்ளது. அந்த ஊற்று வற்றாததாக உள்ளது. பவழக்குன்றின் மேலிருந்து கீழே பார்த்தால், அண்ணாமலையார் கோயிலின் முழு கட்டமைப்பு, நம்மை அசரவைப்பதோடு, அழகாகவும் காட்சியளிக்கும். அழகாய் காட்சியளிக்கும் பவழகிரீஷ்வரர், அர்த்தநாதீஷ்வரர் மற்றும் முத்தாம்பிகையும் இக்கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ளனர். இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆடிக் கிருத்திகையின்போது திருவிழா நடக்கும்.
இந்த கோயிலின் உட்புறத்தில் ரமண மகரிஷி தியானம் செய்த இடம் உண்டு என சொல்லப்படுகிறது. இதே இடத்தில் பல மகான்களும், ரிஷிகளும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இறை நம்பிக்கையைத் தாண்டி, இது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும், பேரமைதியை ருசிக்கும் ஓர் அரிய வாய்ப்பினையும் வழங்குகிறது. மேலும் இந்த பவழக்குன்று இடத்தை பற்றி ஓர் புராணக்கதையும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் தனது உடலிலும் சக்தியிலும் பாதியாகச் சக்தியைச் சேர்த்துக் கொண்டார் எனக் கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நிகழ்ந்த இடம் இந்த பவழக்குன்றுதான் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உலக நன்மைக்காக காஞ்சிபுரம் சென்று பார்வதி தவம் இருந்ததாகவும், அதற்கு சிவபெருமான் திருவண்ணாமலையில் உள்ள இந்த இடத்தில் சென்று தவம் மேற்கொள்ள பக்தர்களால் நம்பப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாளில் திருவண்ணாமலையின் உச்சியில் ஓர் தீப ஒளியாகத் தோன்றி, இறைவன் சிவபெருமான் அவருக்கு அருள்பாலித்து தன்னுடைய இடப்புறத்தை பார்வதிக்கு அளித்ததாகவும் புராணக்கதைகள் கூறப்படுகின்றன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தவிரவும், இன்னும் அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன.