திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், அண்ணாமலையார் கோயிலில் 3 ஆம் பிரகாரத்தில் உள்ள சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும். விழாவின் 10 ஆம் நாள் அன்று அதிகாலை 4 மணிக்கு திருக்கோயிலில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, இந்த ஆண்டும் சுவாமி மாடவீதியுலா, தேர் திருவிழா ஆகியவற்றை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, 10 நாட்களும் சுவாமி உலா திருக்கோவிலில் உள்ள 5ஆம் பிரகாரத்தில் சென்ற ஆண்டு போலவே வழக்கமான ஆன்மிகமரபுபடி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்பிரகாரத்தில் சுவாமி உலா வரும் போது பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 




அதனை தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி, துர்க்கை அம்மன் உற்சவம் நாளை நடக்கிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். சின்னக்கடை வீதியில் உள்ள துரக்கை அம்மன் கோயிலில், இரவு 8 மணி அளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, துர்க்கையம்மன் உற்சவமும் மாடவீதியில் நடைபெறாது. எனவே, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நாளை மறுதினம் பிடாரி அம்மன் உற்சவமும், 9ஆம் தேதியன்று விநாயகர் உற்சவமும் அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசிக்கின்றது. மேலும் கோவிலின் வண்ண விளக்கு அளங்காரங்களை கண்டு பக்தர்கள் வியந்து ரசிக்கின்றனர். மேலும், அண்ணாமலையார் சன்னதியில் எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்ற உள்ளதால் தங்க கொடிமரத்தினை சுத்தம் செய்து வருகின்றனர். பின்னர் தீபத்தன்று மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பக்தர்கள் நெய்காணிக்கை அளிக்கும் வகையில், கோவிலின் வளாகத்தில் நெய்தீப காணிக்கை செலுத்தி வருகின்றனர். தீபாவளி முதல் தொடர் விடுமுறை காரணமாக அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இ-பாஸ் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை நாளை முதல் நடைமுறைக்கு வருவதால், வெளியூர் பக்தர்களின் வருகை கடந்த 2 நாட்களாக வெகுவாக அதிகரித்துள்ளது.