அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக ஒரு மாத்திரையை உருவாக்கியுள்ளது. நலிவுற்ற பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதிலும் கோவிட்டால் ஏற்படும் மரணத்தை தடுப்பதிலும் 89% அளவிற்கு இந்த மாத்திரை தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக உலகமெங்கும் தடுப்பூசி மட்டுமே இருந்து வந்தது. இந்நிலையில் இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது 2 மாத்திரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் கொரோனாவுக்கு எதிராக மால்னுபிராவிர் என்ற மாத்திரையை உருவாக்கினர்.
பைசர் கண்டுபிடித்த அந்த மாத்திரைக்கு பேக்ஸ்லோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனாவின் அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு 3 மாத்திரைகள் 2 வேளைக்கு வழங்கப்படும். மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான மெர்க் தயாரித்ததைவிட கூடுதல் பாதுகாப்பை ஃபைசரின் மருந்து வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. மெர்க்கின் மாத்திரைக்கு நேற்று இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியது. கொரோனாவுக்கு எதிராக முதன்முறையாக உலக அளவில் முதன்முறையாக அங்குதான் மாத்திரை முதன் முதலில் பயன்பாட்டுக்கு வருகிறது. இதனிடையே அந்த மாத்திரைக்கு இன்னும் அமெரிக்கா அரசு சார்பில் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
தீவிர பாதிப்பு உள்ளவர்கள், குறைந்த அளவிலான பாதிப்புகள் உள்ளவர்கள் உள்ளிட்ட 1219 நோயாளிகளிடம் பைசரின் மாத்திரை பரிசோதிக்கப்பட்டது. கோவிட் அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குள் ஃபைசரின் ஆன்டிவைரல் மருந்து கொடுக்கப்பட்டவர்களில் 0.8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பிறகு 28 நாட்களுக்குள் யாரும் இறக்கவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
இந்த மருந்தின் பக்கவிளைவுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 20 சதவீத ஆட்களுக்கு மட்டுமே தீவிர விளைவுகள் இருக்கும் என கூறப்படுகிறது. பெரியவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதிலும் கோவிட்டால் ஏற்படும் மரணத்தை தடுப்பதிலும் 89% அளவிற்கு இந்த மாத்திரை தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 180,000 க்கும் மேற்பட்ட பேக்குகளையும், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது 50 மில்லியன் பேக்குகளையும் தயாரிக்க ஃபைசர் திட்டமிட்டுள்ளது. இதுவரை தடுப்பூசியே பிரதானமாக இருந்த நிலையில் மாத்திரைகளின் கண்டுபிடிப்பு அடுத்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்