தமிழ்நாட்டில் விரைவில் பெண்களுக்கும் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். சமூகநீதி வரலாற்றில் இது பெரும் மைல்கல் எனச் சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வந்தனர். பல்வேறு கட்சிகளும் இந்த அறிவிப்பை வரவேற்றிருந்தன. இந்நிலையில் இது ஒன்றும் வரலாற்றில் புதிய செயல் அல்ல என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி கருத்து கூறியிருந்தது.  


அந்தக் கட்சியின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பதிவில், ’பெண்கள்  அர்ச்சகராக மேல்மருவத்தூர் போன்ற பல்வேறு கோயில்களில் சேவையாற்றிக் கொண்டுள்ளனர்.கோவை பேரூர் ஆதீனம் போன்ற பழமையான ஆதீனங்கள்  பெண்களுக்கு ஆன்மீக பயிற்சி அளித்து கோயில் நிகழ்வுகளை நடத்த ஊக்கமளிக்கிறார்கள். ஹிந்து மரபில் பெண்களுக்கான ஆன்மீக தளம் பெருமளவு அனுசரணை கொண்டது’ எனக் குறிப்பிட்டிருந்தார். 






மேல்மருவத்தூரில் பெண்கள் வழிபாடு




வானதி சீனிவாசன் சொன்னதில் தமிழ்நாட்டின் பன்னெடுங்கால வழிபாட்டு வரலாறு அடங்கியுள்ளது.  ஆசீவகம், சைவம் , நாட்டார் என மரபியல் சார்ந்த வழிபாடுகளைக் கடந்துதான் இங்கே கோயில் கருவறைகளில் ஆண்கள் குறிப்பாக பார்ப்பனர்கள் மட்டுமே வழிபாடு செய்யலாம் என்கிற முறை வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். . 


இதற்கிடையேதான் 60-களில் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உருவானது. பெண்ணைக் கடவுளாகவும், பெண்களைச் சித்தர்களாகவும் கொண்ட இந்தக் கோயிலில் பெண்கள்தான் கருவறைக்குள் சென்று அங்கிருக்கும் கடவுளுக்கு அர்ச்சனை வழிபாடு செய்கின்றனர்.  ’மற்ற கோயில்லன்னா பெண்கள் அதைத் தொடக்கூடாது, இதைத் தொடக்கூடாதுனு ஆயிரம் சொல்றாங்க. ஆனா இங்க அப்படிக் கிடையாது. நாங்கதான் கருவறைக்குள்ள போய் எல்லாம் செய்யறோம். பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததே இந்தக் கோயில்தான். கரண்டி பிடிச்சிட்டு இருந்த எங்களை வேள்வி செய்யச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. நாங்க வலிமையானவர்கள் அதனால் எங்களை ஒருத்தரை ஒருத்தர் அழைக்கிறதே சக்தின்னுதான் அழைச்சுப்போம். வலிமையின் அடையாளமாத்தான் சிவப்புத்துணி கூட உடுத்திக்கிறோம்’ என்கிறார் அந்தக் கோயிலில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக வழிபட்டு வரும் பக்தர் ஒருவர். பெண்கள் இருமுடிகட்டிக்கொண்டு ஐயப்பன் கோயிலுக்கு வரக்கூடாது என்னும் பாகுபாடு நிலவும் நாட்டில் இந்தக்கோயில் பெண்களுக்காக என்று மட்டுமே தனியாக இருமுடிகட்டும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.




இதன் தொடக்கம் எங்கே? 


இந்தக் கோயிலில் பெண்கள் மட்டுமே அர்ச்சனை செய்வதற்கு ஆன்மீக ரீதியான காரணங்கள் மட்டுமே நமக்குச் சொல்லப்படுகின்றன, ‘சுயம்புவாக வேப்பமரத்தில் உருவான அந்தக் கோயிலின் கடவுள் சக்தியின் அவதாரம் என்றும் ஐம்பூதங்களும் அந்த சக்தியால்தான் இயங்குகிறது என்பதால் மற்ற வழிபாட்டுத்தளங்களைப் போல இல்லாமல் இந்தக் கோயிலில் தொடக்கத்திலிருந்தே பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது’ என்றும் சொல்கிறார்கள் கோயில் நிர்வாகத் தரப்பினர்.


இப்படி அர்ச்சனை செய்ய வரும் பெண்கள் தனித்தனியாக வரமுடியாது. ஒவ்வொரு ஊர்ப்பகுதிகளிலும் மன்றம் அமைத்து குழுக்களாக இயங்கும் பெண்கள் தங்களுக்கான நேரகாலத்தைக் குறித்துக்கொண்டு குழுவோடு வந்து கோயிலில் அர்ச்சனை செய்யலாம். கிட்டத்தட்ட பெண்களிடையே சகோதரத்துவம் மற்றும் குழுவாக இயங்கும் ஆற்றலை வளர்க்கும் யோசனையாகவும் இது இருக்கிறது. 


Also Read: திறந்த பலனை அடைந்தது டாஸ்மாக்... ஒரே நாளில் ரூ.164 கோடியை தாண்டிய விற்பனை!