மேலூர் அருகே மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூரில் பழமைவாய்ந்த சிவன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர் ஆகும். இங்கு அரிமர்த்தன பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் சிவாலாயம் இங்கு உள்ளது.

 





ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவிழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாகவும் இக்கோயில் உள்ளது. 2 ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு இவ்வருடம் விமரிசையாக நடந்தது. கடந்த 3-ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய திருவிழாவான இன்று திருமறைநாதருக்கும் வேதநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் ஆலயத்தில் நடந்தது.



சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்களை முழங்கி மேளதாளம் முழங்க விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாண திருவிழா பார்க்க வந்த திருமணமான பெண் பக்தர்கள் தாலிக் கயிற்றை மாற்றுகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை திருத்தேரோட்டம் நடைபெறுகின்றது.




 

இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், “மேலூர் பகுதியில் இருந்து சனிக்கிழமை தோறும் சாமி கும்பிட வருவோம். திருவாதவூரில் சிவன் கோயில் சிறப்பு பெற்றது. அதே போலீஸ் சனீஷ்வரர், மாணிக்க வாசகர் கோயிலும் சிறப்புடையது. கோயிலில் முக்கிய திருவிழாவாக இருப்பதால் திருமறைநாதருக்கும் வேதநாயகி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் ஆலயத்தில் நடந்தது. இதை பார்த்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்டு தோறும் தொடர்ந்து வழிபட இறைவன் வாய்ப்பு கொடுக்க வேண்டும்” எனவும் மகிழ்ச்சியுடன் நமக்குத் தெரிவித்தார்.