தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் பவளக்கொடி அம்பிகை சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் பழமையான கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 31 ஆவது சிவத்தலமாகும். பவள மல்லிகை இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது.சிறப்பு பெற்ற கோயிலிலுள்ள மூலவருக்கு 10008 ருத்ராட்ஷரத்தால் அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என முடிவு எடுத்து, இமயமலயை சேர்ந்த சிவபக்தர்கள் வழங்கினார். அந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது பின்னர் கயிலாய வாத்திய இசை முழங்க, இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட, பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சம் , காளியம்மன் கோவிலில் இருந்து ருத்ராட்சத்தை பக்தர்கள் தலையில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.சுவாமி யோக பத்ரீநாத் தலைமையில், சபரிமலை அய்யப்பன் சேவா சங்கம் ராஜநாயகம் உள்ளிட்ட பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயிலில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரருக்கு மகா அபிஷேகம் மற்றும் ருத்ராட்ச அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ருத்ராட்சம் அனைத்தும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இது குறித்து சுவாமி யோகி பத்ரிநாத் கூறுகையில், இமயமலை உள்ள எங்கள் குருவான யோகாச்சாரி வழிகாட்டலுடன், 16 பேர் கொண்ட குழு ஸ்ரீ மகா ருத்ராக்ஷம் என்ற பெயரில் பாடல் பெற்ற தலங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புடைய கோயில்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் தொடர்ந்து ருத்ராட்ச அபிஷேகம் வழங்கி வருகிறோம்.இதுவரை 150 க்கும் மேற்பட்ட கோயில்களில் உலக நலன் வேண்டி 12 லட்சத்திற்கு மேற்பட்ட ருத்ராட்சத்தின் மூலம் சிவ லிங்கங்களுக்கு ருத்ராட்ச அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு கோயில் மூலம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் ஒரு லட்சம் ருத்ராட்சம் கொண்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அபிஷேகம் செய்துள்ளோம்.
இமயமலையில் இருந்து ஐந்து முக ருத்ராட்சம் வாங்கி அதனைக் கொண்டு அபிஷேகம் செய்கின்றோம். நாட்றம்பள்ளியில் சொந்தமாக சிவன் கோயில் கட்டுகிறோம். சிவ பக்தர்களின் புனித அடையாளமாக விளங்குவது ருத்ராட்சம். ருத்ராட்சமும், திருநீறும் அணிந்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவார்கள்.ருத்ராட்சம் அணிவதன் மூலம் உடலில் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் சக்தியாக அது விளங்குகிறது. சிவனடியார்கள் பலர் ருத்ராட்சத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.அதேபோல் ருத்ராட்சங்களை கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது மிகப்பெரிய நன்மையை தரும் என ஆகமங்கள் கூறுகின்றன. இதன் மூலம் மன நிம்மதி பெற்று அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். கோயில்களில் மட்டும்தான் ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும் என்றார்.