அன்பார்ந்த abp நாடு வாசகர்களே இன்றைக்கு மக்கள் தொகையில் முக்கால் பங்கு அனைவரும் ஏதோ ஒரு வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டத்தான் செய்கிறோம். ஆனால் எல்லோரும் வாகனங்களை வைத்து தொழில் செய்து டிரான்ஸ்போர்ட் முதலாளியாவது இல்லை.
டிரான்ஸ்போர்ட் அதிபர் ஆக வேண்டுமா?
இந்த கட்டுரையை படிக்கும் உங்களில் யாரேனும் ஒருவருக்கோ அல்லது பலருக்கும் வாகனங்களை வைத்து தொழில் செய்யும் டிரான்ஸ்போர்ட் யோகம் நிச்சயமாக இருக்கும். அது நீங்கள் ஒரே ஒரு வாகனத்தை வைத்து தொழில் செய்தாலும் சரி, அல்லது பல வாகனங்களை வைத்து தொழில் செய்தாலும் சரி, அனைவருக்குமே பொருந்தும். வாருங்கள் உங்களை டிரான்ஸ்போர்ட் அதிபர் ஆக்குவதற்கு உங்கள் ஜாதகம் இடம் கொடுக்கிறதா? அப்படி இருந்தால் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஜாதகத்தில் ’ராகு’ என்ற கிரகம் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த ஏதுவான ஒரு நிழல் கிரகம் என்று சொல்லலாம். காரணம் ராகுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரன், செவ்வாய் என்று அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காரகத்துவம் உள்ளது.
உதாரணத்திற்கு ’செவ்வாய்’ என்றால் கடினமான பொருள், சுடுகின்ற பொருள், காரம், நெருப்பு என்று சொல்லிக்கொண்டே செல்லலாம். இப்படியாக இருக்கும் சமயத்தில் 'குரு’ என்ற கிரகத்திற்கு காற்று, உயிர் மூச்சு, வாயு என்று கூறிக்கொண்டே செல்லலாம். ஆகையால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான காரணத்துவங்கள் இருக்கின்ற மாதிரி, ராகுவுக்கு ”முன்னோக்கி செல்லுதல்” என்ற ஒரு காரணத்துவம் உண்டு.
பழைய நூல்களில் ராகு-வை பற்றி குறைவாகத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 'ராகு’- ’கேது’க்களை பற்றி பெரிய அளவுக்கு ஆராய்ச்சி இல்லாமல் இருந்திருக்கிறது. தற்போது தொழில்நுட்பம் வளர, வளர ’ராகு’- ’கேது’க்களை பற்றி அனுபவரீதியாக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர் நம் ஜோதிடர்கள்.
"முன் செல்லும் ராகுவும்" - 'Transport' தொழிலும்:
அளவில்லாமல் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் அலைந்து கொண்டே இருப்பது ராகுவின் செயல். உதாரணத்திற்கு ஒரு வாகனம் சென்னையிலிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி வரை செல்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே வாகனம் மீண்டும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருகிறது. இப்படியே சென்று கொண்டிருக்கும் அந்த வாகனம் மீண்டும் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்கு அதே சாலையை தான் பயன்படுத்தும். ஆனால் ஏற்கனவே சென்ற அதே கோட்டுக்குள் அந்த வாகனம் செல்லாது.
ஒரு சாலையில் அந்த நான்கு சக்கரமும், ஒரே கூட்டுக்குள் ரயில் தண்டவாளம் போல பயணிக்காமல் வாகனங்கள் வரும்போது வலது, இடது புறமாக நகர்ந்து குறிப்பிட்ட இடத்தை விட்டுச்சென்று தான் அது இலக்கை அடைகிறது. இதுதான் ராகு. மொத்தமாக ஒரே இடத்தில் செல்லாமல் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கும். இப்படியான சூழ்நிலையில், உங்களுடைய ஜாதகத்தில் ராகு. சனி உடனோ, குருவுடனும், சுக்கிரனுடனும், சூரியனுடனும், செவ்வாயுடனும், புதனுடனும், சந்திரனுடனும் இருக்கலாம். ஆனால், அவர்கள் உங்கள் லக்னத்திலிருந்து 4-ம் பாவத்தோடு அல்லது 10-ம் பாவத்தோடு தொடர்பு பெற்றார்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் 'டிரான்ஸ்போர்ட்' அதிபர் தான்.
குறிப்பாக வாகனங்களை வைத்து ஒருவர் வெற்றி பெற வேண்டுமென்றால் ராகுவுக்கு 4-ம் இடம் அல்லது 4-ம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் தொடர்பு ஏற்படுமாயின், அவர்கள் டிராவலர்ஸ் என்று சொல்லக்கூடிய பயணிப்பவர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களை கட்டி வைப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இதை அவர்கள் தொழிலாக செய்ய வேண்டும் என்றால் தொழிலுக்கு அதிபதியான 10-ம் அதிபதியோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் 11 ஆம் அதிபதியோடும் தொடர்பு பெற்றிருக்கலாம். சரி உங்கள் ஜாதகத்தில் டிரான்ஸ்போர்ட் வைத்து தொழில் நடத்துவதற்கு யோகம் இருக்கிறது என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்கள், ஆனால் சரியான தொழில் நடக்கவில்லை லாபம் கிடைக்கவில்லை என்று இருக்கிறவர்களுக்கு சில தெய்வ வழிபாட்டை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
துர்க்கை அம்மன் வழிபாடு:
ராகுவுக்கு அதி தேவதையாக துர்க்கை அம்மனை குறிப்பிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை 'ராகு-காலத்தில்' துர்க்கை அம்மனுக்கு 'எலுமிச்சை' பழத்தில் '2' விளக்குகளை ஏற்றி வர வேண்டும். இப்படியாக 9 வாரங்கள் நவகிரகங்களுக்கு விளக்குகளை ஏற்றி மனதார வழிபட்டு, துர்க்கை அம்மன் சன்னதியை 9 முறை சுற்றி வருவீர்கள்.
ஆனால், மிகப்பெரிய முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம். வழிபடும் போது எந்த நோக்கத்திற்காக வழிபடுகிறீர்கள் என்பது தெளிவாக இருக்க வேண்டும். வீடு கட்ட வேண்டும் என்று துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று நீங்கள் விளக்கு போட்டுவிட்டு 'டிரான்ஸ்போர்ட்' அதிபராக முடியவில்லை என்று ஏங்க கூடாது. நமக்கு மேல் இருக்கும் சக்தி நம் எண்ணம் எதுவோ? அந்த எண்ணங்களை தெய்வம்சங்கள் மூலமாக நிறைவேற்றி தருகின்றன. அப்படியானால் நீங்கள் நினைக்கின்றவற்றுக்கும், நடக்கின்றவற்றுக்கும் ஒரு தொடர்பு உண்டு.
இந்த பிரபஞ்சமே பிரம்மாண்டமான பேரறிவால் உருவானது. ஆகையால் தான் கிரகங்கள் சூரியனை சுற்றி ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிகழ்வு சரியாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்று சொன்னால் அவை ஒரு சீரான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். ஆகையால் நீங்கள் எந்த காரியத்திற்கு விளக்கு போடுகிறீர்கள் என்பதை நன்றாக அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.
நவகிரகங்களில் இருக்கும் 'ராகு' :
துர்க்கை அம்மனை வழிபட முடியாதவர்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய கோவில்களில் நவகிரகம் அமர்ந்திருக்கும். அப்படி இருக்கும் இடத்தில் ராகு சன்னதியில் நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி ஒன்பது முறை ராகுவை மனதில் வைத்துக் கொண்டு, நவகிரகங்களையும் மனதில் வைத்துக் கொண்டு சுற்றி வந்தால் நிச்சயமாக உங்களுக்கு மனதில் நினைத்தது நிறைவேறும். உங்கள் ஜாதகத்தில் அதற்கான யோகம் இருக்கிறதா? என்பதை உங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் அணுகி தெரிந்து கொள்ளுங்கள். ட்ரான்ஸ்போர்ட் வைக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் உங்களுக்கு அந்த யோகம் இருக்கிறது என்று அர்த்தம் அப்படி இருந்தாலும் நான் மேலே சொன்ன தெய்வம் அனுகிரகங்களோடு உங்களுக்கு எல்லாம் நன்மையாக நடக்கட்டும் வாழ்த்துக்கள் வணக்கம்!!!