தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் கோட். வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படம் வரும் 5ம் தேதி வெளிவர உள்ளது.



விறுவிறுப்பாக நடக்கும் தி கோட் முன்பதிவு:


தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ளதாலும், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


கோட் படத்திற்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. இதையடுத்து, விஜய் ரசிகர்கள் காலை முதலே கோட் படத்திற்கு ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கியது முதலே விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. கோட் படத்திற்கு இந்த முறை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரும் போட்டி போட்டு டிக்கெட் வாங்குவதால் டிக்கெட் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மிகுந்த எதிர்பார்ப்பு:


உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் கோட் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் பெரும்பாலான தியேட்டர்களில் தி கோட் படம் வெளியாக உள்ளது. தி கோட் படத்தின் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த படம் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வெங்கட்பிரபு இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். பிரபல ஹீரோவாக திகழ்ந்த நடிகர் மோகன் இந்த படம் மூலமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.


விஜய் படமான கோட் படம் மூலமாக பிரசாந்த் மற்றும் மோகன் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். கோட் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் படம் ரிலீசாகிறது.