அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  டிசம்பர் மாதத்தில் 5 கிரகங்கள் பெயர்ச்சியாக இருக்கின்றன.  உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.


புதன் பெயர்ச்சி :


எனது அன்பான மீன ராசி வாசகர்களே, புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு 9-ஆம் இடமான பாக்கியஸ்தானத்தில் இதுவரை சஞ்சாரம் செய்து  வந்தார்.  தற்போது உங்களுக்கு  நான்காம் இடமும், ஏழாம் இடத்து அதிபதியுமான புதன் பகவான் தொழிற் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யப் போகிறார்.  டிசம்பர் 13ஆம் தேதி புதன் பகவானின் பெயர்ச்சிக்கு பின்பு தொழிலில் ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படப்போகிறது. 


குறிப்பாக, புதன் உங்களுக்கு நான்காம் இடத்து அதிபதி அதாவது சுகாதிபதி என்று கூறுவார்கள்.  மனதிற்கு நிம்மதியான  எண்ணங்களைக் கொடுக்கக்கூடிய புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் ஏற்கனவே உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேறு ஒரு உத்தியோகத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.  சிலர் ஒரு வேலையில் இருந்து கொண்டே இரட்டை வேலைகளை பார்ப்பதற்கான வழிவகைகளை செய்வார்கள்.


புதன் பகவானின் பத்தாம் இட சஞ்சாரம் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொண்டு வரப்போகிறது.  குறிப்பாக தொழில் ஸ்தானத்தில் மூன்று நட்சத்திரத்தில், புதன் பகவான் சஞ்சரிக்கும் காலத்தில்  தொழில் ரீதியாக ஒன்று, இரண்டு அல்லது மூன்று வாய்ப்புகள் கூட வரலாம். புதன் பகவான் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தில் அதாவது டிசம்பர் 13ஆம் தேதியிலிருந்து பத்து நாட்களுக்குள்ளாக எட்டாம் பாவத்தில் அமர்ந்திருக்கும் கேது பகவானின் நட்சத்திரம் வாங்கியிருப்பதால் வேலையில் சிறு, சிறு அலைச்சல்கள் டென்ஷன்கள் ஏற்படலாம்.  ஆனால் அவை அனைத்துமே தற்காலிகமானதாக தான் இருக்கும்.  அதேபோல புதன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது, தொழில் மாற்றம் இடமாற்றம் போன்றவை ஏற்படலாம்.  இப்படியாக தொழிலில் நல்ல  மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப்போகும். புதனால் உங்களுக்கு யோகம் தான் அடிக்கப் போகிறது.


சூரியன் பெயர்ச்சி :


சூரிய பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருந்து டிசம்பர் 16ஆம் தேதி தொழில் ஸ்தானத்தில் வந்து அமருகிறார். ஏற்கனவே புதன் பகவான் டிசம்பர் 13ஆம் தேதி தொழில் ஸ்தானத்திற்கு வந்த அதே நேரம்  மூன்று நாட்கள் கழித்து சூரிய பகவானும் தொழில் ஸ்தானத்தில் பிரகாசிக்கப் போகிறார்.  அரசு அரசு சார்ந்த  வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியப்போகிறது.  அரசு உத்தியோகத்திற்காக போட்டித் தேர்வுகளில் காத்திருந்தவர்களுக்கு அரசு அரசு துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைகள் கிடைக்கப் போகிறது.


சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது  வழக்குகளில் இருந்து வெற்றி பெறுவீர்கள்.  மீன ராசிக்கு ஏற்கனவே லக்னத்தில் ராகு பகவான் அமர்ந்து உங்களுக்கு சிறு, சிறு  அலைச்சல்கள் உங்களை சுற்றி இருப்பவர்கள் மூலமாக உருவாக்கக்கூடும்.  அதற்குக் காரணம் நீங்கள் வேகமாகவும் துடிப்பாகவும் செயல்பட காத்திருக்கும் பொழுது உங்களை சுற்றி இருப்பவர்கள் மெதுவாக செயல்பட்டால் உங்களுக்கு கோபம் தானே வரும் அப்படி ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே ராகுவின் பெயர்ச்சியினால் சிக்கி இருக்கும் உங்களுக்கு மிக மிக சாதகமான  சூழ்நிலைகளை சூரியனும் புதனும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து உருவாக்கப் போகிறார்கள்.


சுக்கிரன் பெயர்ச்சி :


மீன ராசிக்கு மூன்றாம் அதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரன்  துலாம் ராசியிலிருந்து உங்களுடைய பாக்கிய ஸ்தானமான விருச்சக ராசிக்குள் நுழைகிறார்.  நீண்ட நாட்களாக நீண்ட தூர பிரயாணம் ஆன்மீக சுற்றுலா பெரியோர்களின் ஆசி, குருமார்களின் தரிசனம் போன்ற மிகப்பெரிய சுப காரியங்கள் உங்களுக்கு நடந்தேற போகிறது.  ஒருவேளை தினமும் நீங்கள் அலுவலகம் சென்று வருபவராக இருந்தால் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, வீட்டிலேயே வீட்டை சுற்றிலும் நீங்கள் சுற்றிவர நேரிடலாம். 


அதற்குக் காரணம் தொழில் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானமான  ஒன்பதாம் வீட்டில் அஷ்டமாதிபதி நுழைவதால்  சற்று ஓய்வு எடுக்கக் கூடிய காலகட்டமாகவும் இது இருக்கலாம்.  சுக்கிரன் ஆடம்பரத்தையும் பணத்தையும் குறிப்பவர் அப்படிப்பட்ட சுக்கிரன் உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் வரும் பொழுது தடைபட்ட பணவரவு நீங்கி தாராளமான பண வரவு உங்களுக்கு வந்து சேரும்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.


செவ்வாய் பெயர்ச்சி :


செவ்வாய் பகவான் உங்களுடைய ராசிக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்று விளங்கினார் அல்லவா அவர் டிசம்பர் 27ஆம் தேதி  உங்களுடைய தொழில் ஸ்தானமான தனுசு ராசிக்குள் நுழைகிறார்.  ஏற்கனவே புதனும், சூரியனும் தொழில் ஸ்தானத்தில் பக்க பலமாக விளங்கிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு மிகப்பெரிய யோகாதிபதியான இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியான பாக்யாதிபதியும் தொழில் ஸ்தானத்தில் நுழையும் பொழுது. 


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற வார்த்தைக்கு ஏற்ப நீங்கள் உத்தியோக ரீதியாக எங்கு எதை தட்டினாலும் அந்த கதவுகள் வேலை நிமித்தமாக உங்களுக்கு உடனடியாக திறக்கப் போகிறது.  குறிப்பாக செவ்வாய் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது உங்களுக்கு எதிரிகள் யார் என்பதை கண்டறிவீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு போட்டிகள் யார்? என்பதையும் உணர ஆரம்பிப்பீர்கள்.  உங்களுக்குப் பின்னால் பேசுபவர் யார்? முன்னால் நன்றாக பேசுபவர் யார்? என்பதை இனம் பிரித்து அறிய போகிறீர்கள்.  செவ்வாய் சுக்கிரனுடைய நட்சத்திரமான பூராடத்தில் பயணம் செய்யும்பொழுது அனைத்தும் நன்மையாகவே முடியும் குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து நல்ல செய்தி உங்கள் காதுகளுக்கு வந்து சேரும்.  செவ்வாய் பகவான் ஆறாம் வீட்டு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் பொழுது அரசு அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை அரசு தேர்வுகளில் வெற்றி அரசு துறைகளுக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் அடைதல் போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.


புதன்  வக்கிரப் பெயர்ச்சி :


புதன் பகவான் தொழிற் ஸ்தானமான 10-ஆம் இடத்தில் தனுசு ராசியில் வீற்றிருந்து டிசம்பர் 28ஆம் தேதி உங்களுடைய பாக்கியஸ்தானத்தில் பிரவேசிக்கும் பொழுது ஏற்கனவே விட்ட வாய்ப்புகளை மீண்டும் பெறக்கூடிய காலகட்டமாய் அமையும்.  ஏற்கனவே சில விஷயங்களில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நீங்கள் அந்தப் பழைய விஷயங்களுக்கு ஆசைபடவும், புதிய வாய்ப்புகள் மட்டுமல்லாமல் பழைய வாய்ப்புகளுக்கு உங்கள் கதவுகளை திறந்து வைக்கவும்  ஏற்ற காலகட்டமாக அமையும்.  மொத்தத்தில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் உங்களுக்கு தொழில் ரீதியான வெற்றி  கிடைக்கப் போகிறது  வாழ்த்துக்கள் வணக்கம் !!!