விழுப்புரம்: சென்னையில் வெள்ளபாதிப்புகளில் இழந்த குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை வாங்குவதற்கே ஒரு மாதத்திற்கு மேலாகும் நிலையில், மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு 4 நாட்கள் மட்டுமே தள்ளி வைக்கும் தமிழக அரசு ஏன் மின்கட்டணத்தினை தள்ளுபடி செய்யகூடாது என முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தலைமையில் திமுக ஆட்சியில் விலைவாசி ஏற்றம் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வினை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினை இயற்கை வெள்ளம், செயற்கை வெள்ளம் என இருவகையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரிப்பதாகவும் இயற்கையால் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பினால் வெள்ளம் 2015ல் ஏற்பட்டதாக பிரித்து பேசுவதாக வளர்மதி தெரிவித்தார்.
வெள்ளபாதிப்புகளில் இழந்த குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை வாங்குவதற்கே ஒரு மாதம் ஆகுகின்ற நிலையில் மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு 4 நாட்கள் மட்டுமே தள்ளி வைக்கும் தமிழக அரசு ஏன் மின்கட்டணத்தை சென்னை மக்களுக்கு தள்ளுபடி செய்யகூடாது என கேள்வி எழுப்பினார். விலைவாசி, மின்சார கட்டணம் உயர்வினை கட்டுப்படுத்த முடியாத அரசாக திமுக உள்ளது. கஞ்சா விற்பனையை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சொத்துவரி விலைவாசி உயர்வு குறித்து பேசமுடியாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுகவில் அடிமைதனமான கட்சிகளை வைத்துள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர் மட்டுமே ஆனால் உதயநிதியுடன் ஒரு அமைச்சரவை செல்வதாகவும் குடும்ப ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெறுவதாக தெரிவித்தார். தமிழகத்தில் மக்களின் மன நிலை மாறியுள்ளதாகவும் அடுத்து எப்போது அதிமுக ஆட்சி வருமென்று எதிர்பார்த்து காத்துள்ளதாக வளர்மதி கூறியுள்ளார்.