இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இளையராஜா இசையில் நடிக்கும்போது அவரோடு உரையாடிய அனுபவம் பற்றி சொல்லுங்க” என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ், “நான் அவர்கிட்ட நிறைய பேசுனது கிடையாது. அவரோட இசையில் நாச்சியார் படத்தில் ஒரு பாட்டு பாட முடிஞ்சது. அந்த படம் பார்த்துட்டு பாலா சார் கிட்ட ‘அந்தப் பையன் நல்லா நடிச்சிருக்கான்டா. அவன்கிட்ட சொல்லிடு’னு சொல்லியிருக்கார்.


அதே மாதிரி தான் ரஹ்மான் சாருமே சர்வம் தாளமயம் படம் பார்த்துட்டு ‘நான் ஜி.வியை அந்தப் படத்துல வந்த கேரக்டராகத்தான் பார்த்தேன். எங்கேயுமே ஜி.வி தெரியலை’ன்னு சொன்னார். என்னோட கரியர்ல இந்த இரண்டு லெஜெண்ட்ஸ் கூட வேலை பார்த்தது என்னுடைய பாக்கியம்னு நினைக்கின்றேன்’ இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். 


வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகி, விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட வெயில் திரைப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் ரஜினிகாந்த், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைபடங்களுக்கு இசை அமைத்துள்ளார். 


இவர் இசையமைத்த கிரீடம், பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் இவர் டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். 


ஜி.வி.பிரகாஷின் 25வது திரைப்படமாக கிங்ஸ்டன் உருவாகிறது. கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்க தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது.


இந்திய கடற்பகுதியில் நடைபெறும் சில சாகசங்கள், திகில் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் உருவாகி வருகிறது. இதற்காக கப்பல் போன்று மிகப்பெரிய அரங்கம் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். சில காட்சிகள் உண்மையாகவே கடலில் படமாக்கப்படுகிறதாம். கதைப்படி நடுக்கடலில் நிகழும் சில மர்மங்களுக்கு விடைதேடிச் செல்லும் மீனவராக நடிக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

 

மேலும் படிக்க