தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலலி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனி பெருந்திருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேரோட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார். அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் தேர் திருவிழாவுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து திருவிழா காலங்களில் நெல்லையப்பர் கோவிலில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.




இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறும் பொழுது, தமிழகத்தில் பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி வருகிறது. 418 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடக்காத கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் கோவிலில் நாளைய தினம் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நெல்லை நெல்லையப்பர் கோவிலில் நடந்து வரும் பணிகள் அறநிலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவில் ஸ்தல மரம் அமைந்துள்ள இடத்தில் புதிய கல் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நெல்லையப்பர் கோவிலில் மூலிகை தைலம் தயார் செய்யும் பணி தொடங்கி 25 நாட்களாக நடைபெற்று வருகிறது.   கோவிலில் அமைந்துள்ள கருமாரி தெப்பம் புனரமைக்கும் பணி கோவில் பிரகாரங்கள் புனரமைக்கும் பணி உள்ளிட்டவைகள் நடந்து  வருகிறது. நெல்லையப்பர் கோவிலில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து 4 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் விரைவில்  முதல்வரால் தொடங்கப்பட உள்ளது. சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போன்று நெல்லையப்பர் கோவிலில் திருவிழா காலங்களில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ரூபாய் 21 லட்சம் கூடுதல் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் வரை அன்னதானம் சாப்பிடும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




திருவிழா காலங்களில் தேர் உலா வருகின்ற பகுதிகளில் முழுமையாக அறநிலைய துறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரியம் மூலம் தேர் உலா வரும் பாதைகளில் புதைவட  மின்தடமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோவில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள துணை ஆணையாளர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பக்தர்கள் அதிகம் வரும் கோவில்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை பணிகளான கழிப்பறை குடிநீர் வசதிகளை தனியார் நிறுவனம் மூலம் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில கோவில்களை போல திருச்செந்தூர் முருகன் கோவில்,  சமயபுரம் மாரியம்மன் கோவில்,  பழனி தண்டாயுதபாணி கோவில்,  திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் புதிய பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 300 கோடி மதிப்பில் திருச்செந்தூர் கோவிலில் செய்யப்பட இருக்கும் மேம்பாட்டு பணிகளுக்கான முதற்கட்ட அனுமதி கிடைத்துள்ளது. முதலமைச்சர் மூலம் ஆவணி மாதம் அதற்கான பணிகள் தொடங்கப்படும். தமிழகம் முழுவதும் 1500 கோவில்கள் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை போன்று கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.




5 ஆண்டுகளில் திருப்பணிகள் நடைபெறாத கோவில்களே இல்லாத நிலை உருவாக்கப்படும். தமிழகத்தில் மூன்று கோவில்களில் புதிய தங்கத்தேர் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உச்சபட்ச நிலையில் இருக்கும் போதே தமிழக முதலமைச்சர் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது நோய் பரவல் முதற்கட்டத்தில் தான் உள்ளது. இதனால் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் நிலையை ஏற்படாதவாறு முதல்வரின் நடவடிக்கை இருக்கும். முகக்கவசம் அணிந்து கோவிலுக்கு பக்தர்கள் வரும் நிலை இருக்காது என நம்புவோம் என தெரிவித்தார். முன்னதாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்துசெல்வி அம்மன் கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு யாகசாலை பூஜைகளை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவிலில் சிவன் சன்னதி கட்டும் பணிகளை பார்வையிட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண