தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பக்தர்கள் தானமாக, காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கி, அவற்றை தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி அதை வைப்பு நிதியாக வைத்தால் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டலாம் என அமைச்சர் சேகர்பாபு யோசனை கூறியிருக்கிறார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதனைத் தெரிவித்தார்.
சேலத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்தற்காக அமைச்சர் சேகர்பாபு சேலம் சென்றிருந்தார். திருப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் கோயிலில் தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள நந்தவனத்தை முறையாக பராமரிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
அங்கே கண்காணிப்பை முடித்துக் கொண்டு கோட்டைமாரியம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு, கடந்த ஆறு ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். தாமதம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கோட்டைமாரியம்மன் கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 9 ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளன. பக்தர்களிடமிருந்து காணிக்கையகப் பெறப்பட்டுள்ள தங்க நகைகளை உருக்கித் தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைப்பதன் மூலம் ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
வைப்புநிதிக்காக வைக்கப்படும் தங்க பிஸ்கட்டுகளுக்கு, 2.5% வட்டி விகிதம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இதன் மூலமாகப் பெறப்படும் தொகை கோயில்களின் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதனை உடனடியாக மேற்கொள்ள தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள் உள்ள தங்க நகைகளை மும்பையில் உள்ள இந்திய அரசின் அனுமதி பெற்ற ஆலையில் உருக்க திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழுவில் நகை மதிப்பீட்டாளர்கள், இணை ஆணையர்கள் அடங்கிய குழுவாக இது அமையும். இந்தக் குழு வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றும்" என்று தெரிவித்தார்.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்:
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
அதேபோல், கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் தற்காலிகப் பணியாளர்களாகப் பணொயாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அதற்கான பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சருடன் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.