மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் சைவ மடங்களில் ஒன்றான தருமபுர ஆதீனத்தின் செயல்பட்டு வருகிறது. இந்த ஆதினத்தின் கீழ் 27 பிரசித்தி பெற்ற சிவாலயங்கள் உள்ளிட்ட பல கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட  சிவாலயங்களில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரஸ் தொற்று நீங்க வேண்டி சிறப்பு ஹோமம் நடத்த தருமபுர ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தினார். 




அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கொரோனா வைரஸ் ஒழிய வேண்டியும் ஸ்ரீ மகா பாசுபதாஸ்த்ர ஹோமம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் ஓதி, யாகம் வளர்க்கப்பட்டு அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தொற்று குறைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து வழிபாட்டனர். 




உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு பெரும் இன்னல்களை கொடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக வல்லரசு நாடுகளே வழிதெரியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் கொரோனோ வைரஸ் தொற்றால் இதுவரை 20590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. அது தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி நேற்று 34 ஆக பதிவாகியது. இது மாவட்ட மக்களிடையை நிம்மதி பெருமூச்சு விட செய்தது 




மேலும் இதுவரை 19 ஆயிரத்து 986 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 28 பேர் குணமாகி சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒருவர் உயிழந்ததை அடுத்து கொரோனா வைரஸால் மாவட்டத்தின் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் வைரஸ் தொற்று ஒழிய வேண்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சிவாலயங்களில் நடைபெறும் யாகம் ஆன்மீகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களுக்கு இதன் மூலம் கோரோனோ ஒளியும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.