ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதும், பீரோவை திறந்து வைத்து வெளியூர் செல்வதும் ஒன்றாகிவிட்டது. வங்கியில் திருடுவதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. நேரா ஏடிஎம் மிஷினை டார்க்கெட் பண்ணோமா... நாமத்தை போட்டோமா, நறுக்குனு நாப்பது, ஐம்பது லட்சத்தை பார்த்தோமான்னு திருடர்களெல்லாம் வாட்ஸ் ஆப் அப்டேட் மாதிரி, வாரம் வாரம் அப்டேட் ஆகிட்டு இருக்காங்க. என்ன பாதுகாப்பு போட்டாலும், விவேக்கிடம் பரவை முனியம்மாள் பிடுங்கி ஏறியும் ‛தம்பிள்ஸ்’ போல தான், கொள்ளையர்கள் ஏடிஎம் பாதுகாப்பை அணுகுகிறார்கள். சென்னையில் கொத்து கொத்தாக எஸ்.பி.ஐ., ஏடிஎம்.,களில் கெத்து காட்டியதிலிருந்து, மிஷினையே அலேக்கா தூக்கி மலாக்கா கொண்டு போனது வரை, எந்த பாதுகாப்பும் எங்களை கட்டுப்படுத்தாது என தொடர்ந்து கர்ஜிக்கிறார்கள் கொள்ளையார்கள். அதனுடைய தொடர்ச்சி தான் திண்டுக்கல் மாவட்டத்திலும் நடந்துள்ளது. 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கருக்காம்பட்டியைச் சேர்ந்த 50 வயதான மருதாயி என்பவர், தனது கணவர் ஓமன்ந்திடம் தனது ஏடிஎம் கார்டை கொடுத்து 5 ஆயிரம் ரூபாய் எடுத்து வர கூறியுள்ளார். கார்டுடன் வந்த கணவருக்கு, பணம் எடுக்க தெரியவில்லை. யாரிடமாவது உதவி கேட்கலாமா என சுற்றி பார்த்த போது, அதற்காகவே காத்திருந்தவர் போல, ‛மே ஐ ஹெல்ப் யூ...’ என, ஏர் இந்தியா பணியாளர்கள் போல தானாக ஆஜரானார் ஒரு இளைஞர். அவர் கேட்டுக்கொண்ட 5 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு, கார்டையும் அவரிடம் ஒப்படைத்து, ‛நாங்க இருக்கோம்...’ என்பதைப் போல, அவரை அனுப்பி வைத்துள்ளார். இவரே பணத்தை எடுத்தது போல வீட்டில் வந்து மனைவியிடம் ஒப்படைத்த ஓமனந்தின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை பணம் எடுப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்திற்கு சென்ற ஓமனந்த், இயந்திரத்தில் கார்டை தேய்க்க, இயந்திரம் அதை ரிஜெக்ட் செய்து கொண்டே இருந்தது. ‛என்னடா இது... திண்டுக்கல்காரனுக்கு வந்த சோதனை...’ என, கார்டும் கையுமாக சம்மந்தப்பட்ட வங்கிக்கு படையெடுத்தார் ஓமனந்த். கார்டை வாங்கிப் பார்த்த வங்கி அதிகாரிகள், ‛இது உங்க கார்டே இல்லை..’ எனக்கூற, ஓமன்ந்த், உடைந்து போனார். அதுமட்டுமில்லாமல், அவரது கார்டை பயன்படுத்தி வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளில் 65 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதையும் கூற, ‛சார்... எனக்கு 5 ஆயிரம் ரூபாயே எடுக்கத் தெரியாது...’ என , கதறியுள்ளார் ஓமனந்த். 


விவகாரம் வேறு மாதிரி போக... நேராய் வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மோசடி இளைஞருக்கு வலைவீசினர். ஏடிஎம் இயந்திர சிசிடிவி காட்சிகளை வைத்து நாகம்பட்டியில் ஒரு பெண்ணுடன் தங்கியிருந்த ஆபேல் பாலா என்கிற அந்த அபேஸ் பாலாவை பிடித்தனர். 27 வயதில் முழுநேர போலி ஏடிஎம் மோசடிப்பணியை செய்து வந்த அவர், பெரு நகரங்களை குறி வைக்காமல், சிறு நகரங்களை தேர்வு செய்து, அங்கு வரும் பாமர மக்களை ஏமாற்றி, ஏடிஎம்., பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் கட்டுக் கட்டாக ஏடிஎம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. ‛சமூகத்திற்கு நீங்க செய்த பொது சேவை போதும்...’  என, பாலாவை கூலாய் தூக்கிச் சென்றது போலீஸ். இன்னும் பலர் தங்களது ஏடிஎம் கார்டு மாறியதே தெரியாமல், தினமும் மிஷினில் தேய்த்துவிட்டு, இயந்திரம் பழுது என வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கார்டுகள் எல்லாம் ஆபேல் பாலாவின் அலமாறியில் இருக்கின்றன. விழிப்புணர்வு... அனைத்திலும் தேவை. அதிலும் ஏடிஎம் போன்ற பண விவகாரத்தில் இன்னும் அதிகம் தேவை. அதை தான் போலீசார் ஆரம்பத்திலிருந்த சொல்கிறார்கள். அனைவரும் கவனமாக கையாளவும்.