செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அனந்த மங்கலம் கிராமத்தில், கிபி 1097 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு ராஜராஜ சோழனால் பராமரிக்கப்பட்ட 920 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கோவிலானது பராமரிப்பின்றி இருந்தது. இதனை அடுத்து 2008ல் முதல் முறையாக பராமரிப்பு செய்யப்பட்டு கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2013ஆம் ஆண்டு தனி சன்னதி உருவாக்கப்பட்டு இரண்டாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 90 அடி உயரத்தில் ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் திருப்பணியை நிறைவு பெற்று இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 7 மணி அளவில் மங்கல இசை, வேத பாராயணம் நடைபெற்றது. இதனையடுத்து நூதன ராஜகோபுரம் மற்றும் விமான கும்பாபிஷேகம், நான்கு கால பூஜை அனைத்து மூல மும்மூர்த்திகளிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாண வைபவம் இன்று மாலை நடைபெற உள்ளது. 90 அடி உயர ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தில் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டதை அடுத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.