சென்னை தெற்கு மாவட்ட திமுகவில் வட்டச் செயலாளராக பதவி வகித்து வந்தவர் மடிப்பாக்கம் செல்வம் பணியாற்றி வந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை புறநகர் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிர்வாகியாக மடிப்பாக்கம் செல்வம் திகழ்ந்து வந்தார். இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது , அப்பகுதியில் வேட்பாளராக அறிவிப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில் மடிப்பாக்கம் செல்வம், தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். செல்வத்தின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவி சமீனாவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமீனா செல்வம், மக்கள் பணியில் ஈடுபட தொடங்கினார். கணவர் செல்வம் இல்லாத நிலையில் அவருடைய தாய் லிசி மருமகள் சமீனாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் மாமியார்- மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உன்னை கவுன்சிலர் ஆக்கினோம். அதற்காக மாதம் மாதம் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என மருமகள் சமீனாவிடம் கேட்டு மாமியார் லிசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், மாமியார் லிசி வீட்டிலிருந்த இரும்பு பூட்டைக் கொண்டு கவுன்சிலர் சமீனாவின் மண்டையை உடைத்துள்ளார்
இதில் பலத்த காயமடைந்த சமீனா, இரத்த வெள்ளத்தில் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சமீனா செல்வம் அளித்த புகாரின் பேரில் அவரது மாமியார் லிசி மீது 294(b), 323, 324, 341, 506(2) ஆகிய 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, மாமியார் மற்றும் மருமகளுக்கு இடையே கடந்த சில நாட்களாகவே சண்டையில் இருந்து வந்துள்ளது. நேற்றும் மாமியார்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதனையடுத்து, மாமியார் வீட்டிலிருந்த இரும்பு பூட்டைக் கொண்டு கவுன்சிலர் சமீனாவின் மண்டையை உடைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த சமீனா ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சமீனா செல்வம் அளித்த புகாரின் பேரில் அவரது மாமியார் லிசி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றோம் என தெரிவித்தனர்.