சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், தேரோட்ட நிகழ்வும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும்  நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் மதுரை மாநகரில் இருந்து அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார் கள்ளழகர்.

 



 

இந்நிலையில் ”கள்ளழகர் சித்திரைத் திருவிழா, நிர்வாக குளறுபடியால் 60 மண்டகப்படிகளில் கள்ளழகர் வரவில்லை, மண்டகப்படி வசூலில் முறைகேடு நடைபெற்றுள்ளது, அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும்” மண்டகபடிதாரர்கள் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.



 

கடந்த 100 வருடங்களாக ஐந்து தலைமுறைகளாக பாரம்பரிய மரியாதைக்காக மண்டகப்படி அமைத்து வருகிறோம். இந்த ஆண்டு தல்லாகுளம் பெருமாள் கோயிலை சுற்றியுள்ள 68 மண்டகப்படிகளுக்கு கள்ளழகர் வரவில்லை.  இது குறித்து கேட்டால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும், காவல்துறை பாதுகாப்பு கொடுக்கவில்லை என கோயில் அதிகாரிகள் கூறுகின்றனர் தெரிவிக்கின்றனர். கள்ளழகர் கோயில் அதிகாரிகள் பணம் வசூல் செய்துவிட்டு மண்டகப்படியில் சாமியை கொண்டு வரவில்லை. கோயில் நிர்வாகிகள், ஊழியர்கள் மடாபதி தோரணையில் அராஜகம் செய்கின்றனர்.

 



 

சாமி மண்டகப்படிகளில் நிறுத்தாததது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை மண்டகப்படி அமைத்தவர்களுக்கு நஷ்டம் ஆகியுள்ளது. மண்டகப்படியில் சாமியை நிறுத்துவதற்கு ரசீது கூட தராமல் கோயில் நிர்வாகத்தினர் கூடுதல் பணம் வாங்கியுள்ளனர்.  இது குறித்து முதல்வர், அறநிலையத்துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம். இதேபோன்று கோயில் அதிகாரிகளிடம் நிர்வாகத்திறன் இல்லை, மக்களுக்காக தான் திருவிழா. தனிப்பட்ட நபருக்காக அதிகாரிகளுக்காக திருவிழா நடத்தப்படவில்லை. சாமியை மண்டகப்படியில் எழுந்தருள யாருக்கு அதிகாரம் உள்ளதோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குதிரை வாகனம் மண்டகப்படிக்கு வராததற்கு சரியான திட்டமிடல் செய்யாத கோயில் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.