மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானதைத் தொடர்ந்து, இன்று மாலை அவரது உடல் ஆதீன முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே இளவரசராக ஆதீனத்தால் முடிசூட்டப்பட்ட ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியாருக்கு, அடுத்த 15வது நாளில் ஆதீனமாக பட்டம் சூட்ட பிற ஆதீன மடாதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.




இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, முன்பு ஒருமுறை அருணகிரிநாதரால் பட்டம் சூட்டப்பட்ட நித்தியானந்தா, அருணகிரிநாதர் இறந்ததைத் தொடர்ந்து தன்னை மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு, சில அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். பொதுவாக நித்தியானந்தாவின் அறிவிப்புகள் அட்ராசிட்டி நிறைந்தவையாக இருக்கும். இப்போது கைலாசா அதிபம் வேறு. சொல்லவா வேண்டும். ஒட்டுமொத்த நாட்டு(கைலாசா) மக்களுக்கும் அவர் விடுத்திருக்கும் அறிவிப்புகளை கேளுங்கள்....



  • 292வது ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவிற்கு ஒட்டு மொத்த கைலாசாவும் இரங்கல் தெரிவிக்கிறது

  • நாடு தழுவிய துக்கமாக இது அனுசரிக்கப்படும்

  • இந்து நாட்டின் அதிபராக மறைவு செய்திக்கு வருந்துகிறேன்

  • 2012ல் மதுரை ஆதீன இளவரசாக அருணகிரிநாதர் எனக்கு பட்டம் சூட்டினார்

  • அருணகிரி நாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கைலாசா கொடி அரை கம்பத்தில் பறக்கும்

  • கைலாசா பார்லிமெண்ட் மற்றும் அனைத்து அரசு அலுவலகத்திலும் கொடி அரைகம்பத்தில் பறக்கும்

  • 13 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும்; கொடி அரை கம்பத்தில் பறக்கும்

  • உலகெங்கிலும் உள்ள கைலாசவாசிகள் இதை கடைபிடிக்க வேண்டும்

  • கைலாசா தூதரகம் மற்றும் பொதுஇடங்களில் அருணகிரிநாதருக்கு அஞ்சலி செலுத்தப்படும்

  • அடுத்த 13 நாட்களுக்கு அனைத்தும் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது

  • கொண்டாட்டங்கள் இன்றி பூஜைகள் நடத்த அனுமதி

  • அதிபரிடமிருந்து அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்கவும்

  • அருணகிரிநாதர் பெயரில் ஆதிசைவ பல்கலை கழகம் திறக்க கல்வித்துறைக்கு உத்தரவு

  • அடுத்த 2 ஆண்டுகளில் பல்கலை கட்டி முடிக்கப்பட வேண்டும்.

  • அறிவியல், கலை, தத்துவம், கட்டடக்கலை, மருத்துவம், நிர்வாகம், ஆன்மிகம், கல்வி சார்ந்து பல்கலை அமையும்

  • கைலாசாவின் ஆன்மிக முறைப்படி அருணகிரிநாதருக்கான மரியாதைகள் செலுத்தப்பட வேண்டும்

  • அருணகிரிநாதருக்கு சிறப்பு ருத்ராபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜைகள் நடைபெற வேண்டும்

  • கைலாசாவின் அனைத்து கோயில்கள், மடங்கள் அனைத்திலும் இது கடைபிடிக்க வேண்டும்

  • 13 நாள் துக்க அனுசரிப்பு முடிந்த பின் அருணகிரி நாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும்

  • கைலாசாவின் மகாசன்னிதானமாக அருணகிரிநாதரை அறிவிக்க ஆன்மிகத்துறைக்கு உத்தரவு

  • அருணகிரிநாதர் நினைவாக கைலாசவாசிகர் அன்னதானம், பசுதானம், எள் தானம், ஸ்வர்ண தானம், வெள்ளி தானம் வழங்க வேண்டும்

  • அருணகிரிநாதரின் குருமுகூர்த்தம்(அடக்கம்) முடியும் வரை கைலாசவாசிகள் விரதம் இருக்க வேண்டும்

  • சிறுவர்களுக்கு விரதத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் 

  • கைலாசாவின் 10111 விதிகளை மதித்து நாட்டு மக்கள் அனைவரும் இந்த அறிவிப்புகளை பின்பற்றவும் 

  • இந்த அறிவிப்புகள் அனைத்தையும் கைலாசாவின் ஆன்மிகத்துறை கண்காணிக்கும்

  • அதிபரின் இந்த அறிவிப்புகள் உடனடியாக அமலுக்கு வருகிறது





தன்னை தானே மதுரை ஆதீனத்தில் அடுத்த மடாதிபதியாக அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, அருணகிரிநாதருக்கு தனது நாட்டில் ஒரு பொறுப்பை வழங்கி மகாசன்னிதானமாக அவரை அறிவித்து புது விதமான மூவ் செய்கிறார். தற்போதுள்ள நிலைப்படி அவரால் மதுரைக்கு வர வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் கைலாசாவில் இருந்தபடி மதுரை ஆதீன பொறுப்பை பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறார்.