கூடல் நகர் மதுரையைத் தவிர வேறு எங்கும் பெண் தெய்வம் முடி சூடி திக்விஜயம் செய்வதில்லை என்றும் மீனாட்சி பாண்டியர்களின் குலதெய்வமென சொல்லும் வகையில் பட்டம் சூடும் அன்று பாண்டியர்களின் குலத்தின் சின்னமான வேப்பம்பூ மாலையை சூடுகிறாள்' என்கிறார் தொ.பரமசிவன். அந்த அளவுக்கு பண்பாட்டு ரீதியாக பெருமை கொண்டது மதுரை. இம்மாநகரில் சித்திரை திருவிழா உலக புகழ்பெற்ற  நிகழ்வாக இருந்து வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கடந்த ஆண்டைப்போல இந்தாண்டும் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.  




ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா  முத்திரைக் கொண்டாட்டமாகத் திகழ்வது இந்த 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' திருமணம் தான். 10-ஆம் நாள் விழாவான திருக்கல்யாணம் கோலாகலமாக கொண்டாடப்படும். திருக்கல்யாணத்தன்று விடியற்காலை மீனாட்சியும் - சுந்தரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள 4 வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். வீதியுலா நிறைவு பெற்றதும், கோயிலின் உள்ள  மண்டபம் ஒன்றில் வீற்றிருந்து, கன்னி ஊஞ்சல் அடி, அன்பர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கேதான் இந்திராதி தேவர்கள் கூடி, திருமணத்தை நிச்சயிப்பதாக நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அம்மை மீனாட்சியும் அப்பன் சொக்கநாதரும் புதுப்பட்டு உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து வரும் கோலம் அழகுதான். 




இந்த உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 22-ஆம் தேதி பட்டாபிஷேகமும், நேற்றைய தினம் திக்விஜயமும் நடைபெற்று முடிவடைந்தது. இன்று மங்கையர் எதிர்நோக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.  கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கோயிலில் உள்ள நான்கு சிவாச்சாரியர்கள் மட்டுமே இன்றைய திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டு நடத்தினர். பக்தர்கள் காணவேண்டும் என கோயிலின் இணையம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தின் மூலம் திருக்கல்யாண நிகழ்ச்சி  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் செல்போன் மற்றும் டிவிக்களில் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்வையிட்டனர். 


பெண்கள் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற அதே சமயம் தங்களது மஞ்சள் கயிறுகளை மாற்றிக்கொண்டு வேண்டிக்கொண்டனர். எப்போதும் நடைபெறும் திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் எழுந்தருளினர். திருக்கல்யாண மேடையானது கண்களை கவரும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மாள் மீனாட்சி தனது திருமணத்திற்கு எப்போதும் சூடும் முத்துக்கொண்டை போட்டு அழகு கொப்பளிக்கும் ஆபரணங்களை சூடி இருந்தார். பல்வேறு பூஜை  நிகழ்ச்சிகளை தொடர்ந்து  திருமாங்கல்யத்தை சுந்தரேஸ்வரரின் பாதம் மற்றும் கரங்களில் வைத்து பக்தர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்ட பின்னர் சிவாச்சாரியர்கள் மங்கல இசை முழங்க மீனாட்சி அம்மன் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம்  நடைபெற்றது.  




பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் கோயிலுக்கு வெளிப்புறம் புது மண்டபம் முன்பாக நூற்றுக்கணக்கான பெண்கள் புதிய தாலி கயிற்றில் திருமங்கல்யத்தை மாற்றிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் 9.30 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


திருமணத்தில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளுவது வழக்கமாக இருந்துவரும் நிலையில் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறுவதால் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.