சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி 23 ம் தேதி (இன்று) கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 10.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த 2020 மார்ச் 12 ம் தேதி ரூ. 2.56 கோடி ஆலயம் புதுப்பிக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது. இதற்கு முன்னதாக வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 2019ம் ஆண்டு ஆகமவிதிப்படி கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இந்த கோவிலுக்கான கும்பாபிஷேகம் இன்று நடைபெறுவதால் இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, யாகசாலையில் பிரார்த்தனை செய்ய கங்கை, யமுனை,சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகள், ராமேஸ்வரம், அறுபடை முருகன் கோயில்கள் என 15 புண்ணிய இடங்களில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் ஒரு புதிய பித்தளை குடங்களில் பத்திரப்படுத்தப்பட்டு, யாகசாலையில் வைக்கப்பட உள்ள 1300 கலசங்களில் புனித நீர் பகிரப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு யாக வேள்விகள் வளர்க்கப்பட்டு, பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலிலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரலையில் தரிசனம் :
கொரோனா பரவல் காரணமாகவும், தமிழ்நாடு அரசு பிறப்பிக்கப்பட்ட ஞாயிற்றுகிழமை ஊரடங்கு காரணமாகவும் சென்னை வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசிக்கும் வகையில் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்ப தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்