கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கடந்த 08.05.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை கம்பம் போடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 



அதை தொடர்ந்து கடந்த 15. 05 .2022 ஆலயத்தில் மறு காப்பு கட்டப்பட்டு, அதைத்தொடர்ந்து நாள்தோறும் தீர்த்தம் பால்குடம் கொண்டு வந்தனர். கரூர் நகர பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் தங்களது நேர்த்திக் கடனுக்காக ஆலயம் வருகின்றனர். வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அமராவதி ஆற்றில் இருந்து அதிகாலை முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி, அலகு குத்துதல், கரும்பு தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்தனர். அமராவதி ஆற்றில் தொடங்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் தற்போது வரையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக நடந்து வந்தனர்.



அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய வைகாசி பெரும் விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் அலகு குத்துதல், பரவை காவடி, பிரம்மாண்ட விமான காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் அமராவதி ஆற்றங்கரை கூடியதால் அங்கு காணும் இடமெல்லாம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடும் காட்சி காணப்பட்டது.



வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ மாரியம்மன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மாரி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க பிரசித்தி பெற்ற தேரில் மாரியம்மனை கொலுவிருக்க செய்தனர். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, தாரை தப்பட்டை, வாணவேடிக்கையுடன் ஆலயத்தின் முக்கிய நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைத் தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தவாறு சுவாமி ஆடி அசைந்தபடி முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருத்தேர் ஊர்வலம் வந்தது.


 




குறிப்பாக இரண்டு மணி நேரம் நடைபெற்ற சுவாமியின் தேரோட்டம் மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆலயம் வந்த ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பூசாரி மகா தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து வைகாசி மாத தேரோட்டம் சிறப்பாக நிறைவு பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற வைகாசி மாத தேரோட்ட நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 



முதுகில் அலகு குத்தி பறவைக் காவடி மற்றும் விமான காவடிகள் எடுத்து ஏராளமான வாகனங்களில் மினி ஆட்டோ மற்றும் கிரேன் மூலமாக ஒரே வாகனத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட விமானங்களில் தொங்கியபடி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது.