கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஜெயக்குமார். அவரது மகள் ஜெயப்பிரியா. ஜெயப்பிரியாவின் கணவர் பெயர் நவீன். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அமைந்துள்ளது பெத்திக்குப்பம். இந்த கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகளுக்கு சொந்தமாக லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட பிரம்மாண்ட திருமண மண்டபம் ஒன்று உள்ளது.
இந்த நிலையில், இந்த திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உணவு பரிமாறும் வேலைக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்களில் காஞ்சிபுரம் வாலாஜபாத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் சீத்தல் (வயது 19), திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜெயராமன், (வயது 23), விக்னேஷ் (வயது 21) ஆகியோரும் வந்துள்ளனர்.
அப்போது, கீழே இருந்து சமைக்கப்பட்ட உணவுகளை பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு சீத்தல், ஜெயராமன் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் லிப்டில் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது, எடை தாங்காமால் லிப்டின் இரும்பு கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில், பள்ளி மாணவரான சீத்தல் பரிதாபமாக தலைநசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
அவருடன் லிப்டில் இருந்த ஜெயராமனுக்கும், விக்னேஷிற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஜெயராமனையும், விக்னேஷையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்த சீத்தலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வரும் சூழலில், குடும்ப வறுமை காரணமாக சமையல் வேலைக்கு சென்ற மாணவர் தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசர், மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் மகள் ஜெயப்பிரியா மீதும் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்