சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி ப்லவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 8ந் தேதி முதல் கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக  துவங்கியது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அனுதினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில்  உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில்  திருவீதி உலா வந்து  பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.



 

அவ்வகையில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நேற்று இரவு  உற்சவ காமாட்சி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் யானை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில்  திருவீதி உலா வந்து  பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். யானை வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்பாளை வழி நெடுங்கிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 






காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வரலாறு

 

காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு.



 

இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சி யளிக்கின்றாள்.