மேலூர் அருகே மழை வேண்டி மதுபாட்டில்களுடன் கோழிகறி படையல் படைத்து கறிவிருந்து. ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா, பங்கேற்ற ஆண்களுக்கு தலா ஒரு மதுபாட்டில் வழங்கி உபசரிப்பு செய்யப்பட்டது. 



மதுரை மாவட்டம் மேலூர் அருகே சுந்தராஜபுரம், வீராசூடாமனிபட்டி, கச்சிராயன்பட்டி  ஆகிய மூன்று கிராமமக்கள் இணைந்து சின்னகண்மாய் கரையில் அமைந்துள்ள ஐந்துமுழி கோயிலில் ஆடிப்படையல் கொண்டாடுவது வழக்கம். இதில் பக்தர்கள் நேத்திகடனாக ஆடு, சேவல்களை கொண்டு வந்து கொடுப்பர். அதன்படி பக்தர்களால் கொண்டு வரப்பட்ட 100 ஆட்டுக் கிடா, 600 சேவல்கள் பலியிடப்பட்டு அதனை   மண்பானையில் வைத்து சமைத்து சாப்பிடுவது பாரம்பரிய வழக்கம். இதற்காக மண்பானையில் கிடா மற்றும் சேவலின் இறைச்சிகளை மொத்தமாக போட்டு, இதனுடன் வெறும் வேப்பிலையை வைத்து கோயிலின் முன்பு கறியை சமைக்கின்றனர். அப்போது மதநல்லிணக்கத்தை போற்றும் விதமாக இஸ்லாமியரை வரவழைத்து பிரார்தனை  செய்து சர்க்கரை கொடுத்தும் ஒற்றுமையுடன் வழிபட்டனர். 



இதில் குறிப்பாக இறைச்சியை வேப்பிலையுடன் சமைக்கும் போது அதன் சுவையை இழக்காமல் தெய்வீக சக்தியால் சுவையாக இருக்குமென கிராமத்தினர் கூறுகின்றனர். பின்னர் மண்பானையிலுருந்து சமைத்து எடுக்கப்பட்ட கறியினை பிரித்து கொடுத்து உண்ணுகின்றனர். இதில் முழுக்க,முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்று இறைச்சியை சுத்தம் செய்வது முதல் அதனை பிரித்து கொடுத்து சமையல் செய்வது என அனைத்துமே ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது என்பது குறிப்பிடத்தக்கது. மழைவரம் வேண்டி கடந்த சில தினங்களுக்கு முன் இந்த திருவிழா நடைபெற்று முடிந்தநிலையில், மழை பெய்து பூமி செழிக்க, மேலூர் பகுதியில் மற்றொரு விநோத மது திருவிழா நடைபெற்றுள்ளது.






மேலூர் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட  எட்டிமங்கலம் கிராமம் உள்ளது. இங்குள்ள உடலத்தி கண்மாய் கரையில் பழமையான சக்கிவீரன் கோயிலில் மதுபாட்டில்களுடன் சேவல், கோழிக்கறி விருந்து வழங்கி மழை வரம் வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய விழா நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்றது. இந்த கோயிலுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் வண்ணம் பக்தர்கள் வழங்கிய ஏராளமான சேவல்கள் பலியிடப்பட்டு கோழிக்கறி மண் பானைகளில் சமைக்கப்பட்டது.



மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பணத்தை தொலைத்து அலைந்த தம்பதி; கண்டெடுத்ததை ஒப்படைத்த அண்ணன், தங்கை!

 பின்னர் கோயிலில் மதுபாட்டில்கள் அடுக்கிவைக்கப்பட்டு கோழிக்கறி படையலிடப்பட்டது. பூசாரி பாரம்பரிய வழக்கப்படி பூஜைகள் செய்த பின்னர் பக்தர்களுக்கு மதுபாட்டில்களுடன் கறிவிருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மது பழக்கம் உடையோருக்கு மட்டும் மதுபாட்டில்கள் வழங்கப்பட்டது. அவர்கள் மது குடித்து கறிவிருந்தில் கலந்துகொண்டனர். முன்னோர்கள் நடத்தியபடி  மழைவேண்டி இந்த விழா கொண்டாடப்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். ஏராளமான ஆண் பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.