இந்தியா-இங்கிலாந்து இடையே நாட்டிங்கமில் உள்ள ட்ரெண்ட் ப்ரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. போட்டி நடைபெற்றிருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றிருக்கும் என்ற நிலையில், மழை பெய்த காரணத்தால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. முதல் இன்னிங்சில் 64 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்களையும் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


ட்ரென்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் இந்த போட்டியையும் சேர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியையும் சேர்ந்து 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. 


இந்த போட்டி முழுவதும் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணியிலும் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணியில் பும்ரா முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் என்று மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகமது சமி 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.  இங்கிலாந்து அணியைப் பொருத்துவரை ராபின்சன் 5 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


இந்நிலையில், இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் ’மழைதான் வின்னர்’ என நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். நேற்று இரவு முதல், மழை மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றது.