பொதுவாக தமிழ்நாட்டின் கிராமபுற பகுதிகளில் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் திடீரென பாம்புகள் வருவது வழக்கம். அப்படி வரும் பாம்பை சிலர் அடித்துவிட்டு வெளியேற்றுவது வழக்கம். மற்ற சிலர் உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அல்லது தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அந்தப் பாம்பை பிடிப்பது வழக்கம். ஆனால் இங்கு ஒரு பெண்மணி லாவகமாக பாம்பை தன்னுடைய வீட்டிற்குள் இருந்து வெளியேற்றும் காட்சி நம்மை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண் ஒருவர், "நீ உன்னுடைய புற்றுக்கு போ நான் வந்து அங்கே பால் ஊற்றுகிறேன். எங்களை பார்க்கதான் வந்தியா. நாங்கள் நிச்சயம் வந்து உன்னுடைய புற்றில் பால் ஊற்றுகிறோம் நீ இப்போ செல்"எனக் கூறி பாம்பை தன்னுடைய வீட்டிலிருந்து வெளியேற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பதிவிட்டு செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ், "இந்த இரக்க குணம் அதிகம் உள்ள பெண்மணி யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருடைய செயலுக்கு நான் தலை வணங்குகிறேன். ஒரு பாம்பை எப்படி திறமையாக பொறுமையாக கையாள வேண்டும் என்பதை இவரிடம் இருந்து அனைவரும் கற்று கொள்ள வேண்டும். உங்களை போன்று வன விலங்குகளின் உயர்களை மதிக்கும் நிறையே பேர் நமது நாட்டிற்கு தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
பெண் ஒருவர் லாவகமாக தன்னுடைய வீட்டிற்குள் நுழைந்த பாம்பை வெளியேற்றும் வீடியோவை தற்போது வரை 5 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த பெண்மணியின் செயலை பாராட்டி தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தைரியமாக பெண் ஒருவர் பாம்பை கண்டு அஞ்சாமல் அதை அடித்து கொள்ளாமல் நேர்த்தியாக வழி அனுப்பியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!