சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷர்த். இவர் பேக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். வேலை தொடர்பாக மதுரை வந்திருந்த நிலையில், அப்போது பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர்கள் அர்ஷர்த் வைத்திருந்த 10 லட்சம் பணத்தை அச்சுறுத்தி, பிடுங்கிக்கொண்டனர்.



இது தொடர்பாக ஜூலை 27 ஆம் தேதி கொடுத்த புகாரில் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலைய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில்   மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் சுதந்திராதேவி ஆகியோர் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டியை சேர்த்த பால்பாண்டி, மதுரை சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி, விருதுநகர் திருத்தங்களை சேர்ந்த கார்த்திக் என்ற சீமைச்சாமி, ஆகிய மூவரையும் கைது செய்து அவரிடம் இருந்த 2,26,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மூளையாக இருந்து செயல்பட்ட இன்ஸ்பெக்டர் வசந்தி உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாகினர்.





இதையடுத்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளிலும் தேடிவந்தனர். அவரது செல்போன் நம்பரை சோதனை செய்து பார்த்தனர். அப்போது வசந்தி அவரது சகோதரர் குண்டு பாண்டியராஜ் ஆகிய இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பதுங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி ரவிக்குமார் தலைமையில் தனிப்படையினர் கோத்தகிரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு விடுதியில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து மதுரை அழைத்துவந்தனர்.  பின்னர்  இருவரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



இந்த வழக்கில் ஆய்வாளர் வசந்தி தலைமறைவாக இருந்த சமயத்தில் தனக்கு முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார். அதில், "கள்ள நோட்டு மாற்றி கடத்துவதாக  வந்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து சோதனை செய்ய அவரிடமிருந்த 2 பைகளை பரிசோதித்துப் பார்த்தேன். அதில் பணம் எதுவும் இல்லை. ஆனால் தவறான குற்றச்சாட்டின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என கூறியிருந்தார்.


 

இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, இந்த வழக்கின் நிலை குறித்து நீதிமன்றம் அறிந்து கொள்ள விரும்புகிறது. ஆகவே, காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டதற்கு பின்னான வழக்கின் விசாரணையின் நிலை குறித்தும், வசந்தியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விபரம் குறித்து  உரிய தகவல் பெற்று தெரிவிக்க, அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.