மதுரையில் உடல்நலக்குறைவால் மறைந்த 292 ஆவது மகா சன்னிதானம் ஆதீனம் அவர்களுக்கு நேரில் இறுதி மரியாதை செலுத்த வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


’292 ஆவது மகா சன்னிதானமாக இருந்து சில நாட்கள் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆதீனம் சிகிச்சை பலனின்றி மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து நேற்று மாலை  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்னை அழைத்து உடனடியாக மதுரைக்கு நேரில் சென்று மரியாதை செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார். அதனால் இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில் முதல்வரின் கட்டளையை ஏற்று இங்கே வந்து ஆதீனத்தின் பெருமைக்கு ஏற்ப மரியாதை செலுத்தினோம்.


தனிப்பட்ட முறையில் 290 ஆதீனம் வரை எங்கள் குடும்பத்தினர் நெருங்கிய தொடர்பில் இருந்தோம். மறைந்த ஆதீனம் அவர்கள் என் மேல் மிகுந்த பாசத்துடன் இருந்தவர்.அதனால் இது எனக்கு ஏற்பட்ட தனிஇழப்பாகக் கருதுகிறேன். ஆதீனத்துக்கு மரபுகளின்படி சடங்கு செய்ய வந்திருக்கும் தருமபுர ஆதீனத்துக்கு நானும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் ஆறுதல் கூறினோம்.  எந்த ஒரு நிறுவனமும் 292 தலைவர்களைக் காண்பது வியக்கத்தக்கது. இதை ஒரு உதாரணம் கலாச்சாரம் மற்றும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாகக் கருத வேண்டும். அந்த வழிமுறையில் வந்தவர் நம்மை விட்டு சென்றது வருந்தத்தக்க நிகழ்வாகும். ஆனால் ஆதினத்தின் பணிகள் தொடர்ந்து செவ்வனே நடைபெறும் என்ற நம்பிக்கையோடு தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வளர்க்க அடுத்த ஆதீனத்துக்கு ஊக்கம் கொடுக்கும் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’, என்றார். 


அரசியலும் ஆன்மீகமும் கலந்து செயல்பட்ட ஆதீனத்தின் இறுதி மரியாதையில் அரசு மரியாதை அளிக்கப்படுமா என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர்  ’பொதுவாக ஜனநாயக நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் இணைந்து இருத்தல் மரபு அல்ல.ஆன்மீகத்தின் செயல்பாடு என்பது வேறு அரசியல் செயல்பாடு என்பது வேறு இரண்டும் தனித்தனியாக இருப்பதுதான் சமுதாயத்திற்கு நல்லது. மற்ற முடிவுகளை முதல்வர் எடுப்பார்’ என பதிலளித்தார்.


மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிந்துகொண்டு அடுத்து சென்னை திரும்ப உள்ளதாகவும் தெரிவித்தார். கூடுதலாக நாளை சுதந்திர தினத்தில் கருணாநிதி அவர்கள் வாங்கிக்கொடுத்த ’முதலமைச்சர்களும் கொடியேற்றலாம்’ என்கிற மாநில உரிமையின்படி  தேசியக்கொடியை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஏற்றி வைத்திட உள்ளார்’ என்கிற தகவலையும் பகிர்ந்துவிட்டு நகர்ந்தார்.