மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில். தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சீரிய முயற்சியால் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றது.
120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை ஓதப்பட்ட்டு, கடந்த 2 3ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, தினம்தோறும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று பூர்ணாஹீதி ஆகி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்கள் வாசிக்க யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் விமானங்களை அடைந்து.
அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோபுர கலசங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
பாதுகாப்பு பணிக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் கயல்விழி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கும்பாபிஷேகம் நடைபெறும் காலை 11 மணி வரைக்கும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விஐபி, விவிஐபி உள்ளிட்ட 1000 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து 11 மணிக்கமேல் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் உள்ளிட்ட உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படதாது பெரும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.