கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புவனகிரி தொகுதிக்குட்பட்ட கார்கூடல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூகத்தை சார்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் மணிவீரன் விருத்தாசலத்தில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் கார்கூடல் கிராமத்தில் உள்ள பனைமரம் சூழ்ந்து காணப்படும் ஏரிக்கரை பகுதியில் மலம் கழித்துவிட்டு மணிவீரன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது,  அதே கிராமத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த பழனி என்பவரின் மகன் மணி (22) தன்னுடைய நான்கு நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அப்போது அவ்வழியாக வந்த மணிவீரனை அழைத்து, ஒரு பையன் இந்த பக்கம் விஷம் குடிக்க போய் இருக்கிறான் என்று கூறிய மணி மணிவீரனை அங்கும் இங்கும் அழைத்துச்சென்று அலைக்கழித்து உள்ளார்.

 



 

பின்னர் அப்பகுதியில் உள்ள கோயில் பின்புறம் அழைத்துச் சென்று மணிவீரனை மிரட்டி முட்டி போட வைத்ததாகவும், மேலும் மணிவீரன் அணிந்திருந்த அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்ட பனியனை கழட்டச் சொல்லி தகாத வார்த்தைகளால் சாதி பெயரை கூறி மணி திட்டி தாக்கி உள்ளார், பனியன் மட்டுமின்றி மணிவீரனின் கால் சட்டையையும் கழற்றச் சொல்லிய மணி கால் சட்டை, பனியனை வைத்துக்கொண்டு மணிவீரனை நிர்வாண கோலத்தில் மீண்டும் முட்டி போட வைத்து அசிங்கமான வார்த்தைகளை கூறி மது பாட்டிலை உடைத்து மணி தாக்கியபோது மணிவீரனுக்கு வயிற்றுப் பகுதியில் கீரலுடன் கூடிய காயம் ஏற்பட்டதாகவும், வலி தாங்க முடியாமல் மணிவீரன் துடிதுடித்த நிலையில் கதறி அழுததாகவும். 



 

பின்பு, மணிவீரனின் கால் சட்டை மற்றும் பனியனை அப்பகுதியில் தார் சாலை ஓரத்தில் தீயிட்டு மணி எரித்ததாகவும், நிர்வாண கோலத்தில் நடுங்கிய நிலையில் அச்சத்துடன் கதறியழுத மணிவீரன் அங்கிருந்து தப்பித்து உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் ஏரிக்கரை பகுதி அருகில் இருந்த வாய்க்கால் ஓடைகளில் ஓடி ஒளிந்து மாலை இருள் நெருங்கும் நேரத்தில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையோரத்தில் கூனிக்குறுகி தன்னுடைய அந்தரங்க உறுப்பை இருகைகளால் மறைத்துக்கொண்டு கண் கலங்கிய நிலையில் மணிவீரன் வந்த எதிரே வந்த அக்கிராமத்தைச் சேர்ந்த உறவுப் பையனின் மேல் சட்டையை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டு கதறி அழுதபடி சாலையை கடந்து குறுக்கு முட்புதர் வழியாக தன் வீட்டிற்கு சென்றுள்ளார்.  நடந்த சம்பவம் குறித்து தன் தந்தை பாஸ்கர், அண்ணன் விஜியிடம் கூறி கதறி அழுததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மணிவீரனை அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் என மணிவீரன் கூறினார்.



 

பிறகு, நடந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அன்று இரவு அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் அங்ரித் ஜெயின் மற்றும் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மணிவீரனை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது மனிவீரன் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட விருத்தாசலம் காவல் துறையினர் மணி மீது எஸ்சி. எஸ்டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கார்குடல் கிராமத்தில் மறைந்து இருந்த மணியை காவல் துறையினர் கைது செய்து கடலூர் சிறைச்சாலையில் இன்று அடைத்தனர்.