கோயில் நகரம் என்று சும்மா பெயர் வைக்கவில்லை என்பது போல் திரும்பிய திசையெல்லாம் மதுரையில் கோயில்கள் நிறைந்திருக்கும். மீனாட்சியம்மன் கோயில் தான் மதுரையையே நிர்மாணிக்கிறது. ஒவ்வொரு நாளும் திருவிழா போல் மக்கள் கூட்டம் இருக்கும். மீனாட்சியம்மன் கோயில் ஆன்மீகத்தை மட்டுமல்ல

 கலை, கலாசார பண்பாட்டு இயக்கத்தோடு தொடர்புடையது என உறுதிபடுத்துகிறது. இப்படி  பெருமை கொள்ளும் அளவிற்கு பேசப்படும் மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய பரிசீலனை நடைபெற்று வருகிறது. 



மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கு. டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இதற்காக கோயிலில் 'பார்வதி' என்ற சுமார் 25 வயதுடைய பெண் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2000-ல் வாங்கப்பட்ட இந்த யானை கோவில் கிழக்கு ஆடி வீதியில் தனியாக அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பார்வதி யானையின் இடது கண்ணில் 'புண்' ஏற்பட்டு வலியால் துடித்தது. மேலும் கண்ணில் இருந்து நீர்வழிந்து கொண்டே இருந்த நிலையில் பார்வதி யானை சற்று சோர்வாக உள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சிறப்பு மருத்துவ குழு யானைக்கு அளித்த சிகிச்சையின் யானையின் இடது கண்ணில் புண் மற்றும் புரை போன்ற நோய் ஏற்பட்டு இருப்பது தெரிவித்தனர்.


இதனால் அந்த கண்ணில் பார்வை சற்று மங்கி உள்ளதால் யானை சோர்வாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கண் சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனையின் படி கடந்த சில  வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடைத்துறை அறிவியல் பல்கலைகழக குழுவை சேர்ந்த மருத்துவக்குழு சிறப்பு மருத்துவ உபகரணங்கள் விமானம் மூலமாக கொண்டு வந்து அதனை பயன்படுத்தி கண் சிகிச்சை அளித்தனர். தற்போது பார்வதி யானையின் நிலை மேம்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.  யானையின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக குளித்து விளையாடும் வகையில் குளியல் தொட்டி அமைக்க அறநிலையத்துறை பரிந்துரைத்துள்ளதாகவும், அதன் காரணமாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் யானை பார்வதிக்கு குளியல் தொட்டி அமைக்கப்படும் இடம் தேர்வு தொடர்பாக பரிசீலனை நடைபெற்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 "யானை தங்கியுள்ள பகுதியில் தற்போது மண்மேடு ஒன்று உள்ள நிலையில், நிதியமைச்சரின் அறிவுறுத்தல் படி யானைக்கு ஏதுவாக மேலும் ஒரு மண்மேடு அமைக்கப்படும். குளியல் தொட்டியும் அமைக்க யோசனை உள்ளது. யானை தங்கியுள்ள பகுதியில் புதிய மண்மேடு அமைக்கப்பட்ட பின்னர் போதுமான இடம் இருந்தால் அங்கு குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயிலில் யானை தங்கியுள்ள பகுதி மட்டுமே மண் தரை பகுதியாக உள்ளது. கோயிலில் வேறு இடங்களில் பள்ளம் தோண்ட முடியாது. 


எனவே கோயிலில் இடம் இல்லாவிட்டால் வெளியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குளியல் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி பரிசீலனையில் உள்ளது.  தொல்லியல்துறை அனுமதி கிடைத்த பிறகே இப்பணிகளை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட முடியும்" என மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தகவல் தெரிவித்துள்ளார்.