ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் நகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகையை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.



ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆடிக்கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

ஆடிக்கிருத்திகை சூரனை சம்ஹாரம் செய்து தேவர்களை காத்த முருகப்பெருமான், ஆடி கிருத்திகை நாளில் சிவபெருமான் அருளால் சூரனை அழிக்க, சரவண பொய்கையில் 6 குழந்தைகளாக அவதரித்தார். அந்த குழந்தைகளை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்களை கவுரவிக்கும் வகையில் அவர்கள் 6 பேரும் கார்த்திகை நட்சத்திரமாக மாறியதாக கூறப்படுவது உண்டு. கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை விரத நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கிருத்திகை நட்சத்திரம் மாதந்தோறும் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மகத்துவம் வாய்ந்ததாக போற்றப்படுகிறது. ஆடிக்கிருத்திகை அன்று முருகன்கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது உண்டு. இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.





அதன்படி தஞ்சாவூரில் உள்ள அறுபடைவீடுகளாக மேலஅலங்கம் முருகன் கோயில் (திருப்பரங்குன்றம்), வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்சோலை), குறிச்சித் தெரு முருகன் கோயில் (திருத்தணி), ஆட்டுமந்தை அஞ்சல்காரத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோயில் (பழனி), பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவில் (திருச்செந்தூர்) ஆகியவற்றைக் கூறுகின்றனர். இன்று தஞ்சையில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலை கோயில்களில் நடை திறக்கப்பட்டு முருக பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.





மேலும் கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 7 மணி அளவில் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை முதல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல் பாபநாசம் தாலுக்கா மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து  முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி குமார் குடும்பத்தினர் செய்து இருந்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காலை முதல் சுவாமி தரிசனம் செய்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண