ஆடி மாதம்:


இறைவனை வழிபாடு செய்வதற்கு தேவர்களே தேர்ந்தெடுத்த மாதம் தான் ஆடி மாதம். அதனால் தெய்வ வழிபாடுகள் செய்ய மிகவும் உகந்த மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்த மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என பல நாட்கள் மிகவும் விசேஷமான நாட்களாகும். இந்த மாதம் முழுவதும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபட உகந்த விரதமான மங்கள கௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.


ஆடி செவ்வாய்:


ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம், தேவியை மகிழ்வித்து அவரின் அருளை பெறலாம். பொதுவாக செவ்வாய் என்றாலே மிகவும் சிறப்பான நாள். அதிலும் ஆடி செவ்வாய் மிகவும் விசேஷமான நாளாகும். இந்த வருடம் ஆடி மாதத்தில் மொத்தம் 5 ஆடி செவ்வாய் தினங்கள் வருகின்றன. அவை ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய நாட்களாகும். 


திருமண வாழ்வு கைகூடும்:


மங்கள விரதத்தை கடைபிடிப்பதற்காக சில சடங்கு முறைகள் உள்ளன. அதனை பக்தியுடன் அனுசரிப்பதன் மூலம் நம்முடைய அனைத்து விருப்பங்களும், வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. திருமணமானவர்கள், திருமண தடை உள்ளவர்கள் மற்றும் கன்னி பெண்கள் என அனைத்து மகளிரும் இந்த விரதத்தை கடைபிடித்து பார்வதி தேவியின் அருளையும், பூரண ஆசீர்வாதத்தையும் பெறலாம். திருமணத்திற்காக காத்து இருக்கும் பெண்களுக்கு தகுந்த வரனையும், திருமணமான பெண்களுக்கு நிம்மதியான, இன்பமான வாழ்க்கையும் கைகூடும். மேலும் மங்கள பாக்கியம் கூடும்,  குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது




மங்கள கௌரி விரதம்:


மங்கள கௌரி விரதம் மேற்கொள்ள பெண்கள் அதிகாலையிலேயே மஞ்சள் பூசி நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு வழிபாட்டைத் தொடங்க வேண்டும். ஆடி செவ்வாய் அன்று மஞ்சள் பூசி நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் குடும்பத்தில் வறுமை நீங்கி லட்சுமி கடாட்சம் நிறையும். பூஜை அறையை சுத்தம் செய்து அம்மன் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து அல்லது படங்களை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சுவாமிக்கு தீபம் ஏற்றி நெய்வேத்தியம் செய்து ஆரத்தி காட்டி காலை வழிபாட்டை தொடங்க வேண்டும். அம்மன் துதிகளைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது கூடுதல் சிறப்பு.


இன்பமான வாழ்வு:


விரதம் மேற்கொள்ளும் பெண்கள், மாலை வழிபாட்டை முடித்த பிறகு உணவு உண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம். இந்த மங்கள கௌரி விரதத்தை பெண்கள் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும், ஆரோக்கியமான இன்பமான வாழ்வை பெற்று செல்வ செழிப்பும் மகிழ்ச்சியான வாழ்வும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண